நெட்டிசன்:

ஜெயலலிதா மறைவைதொடர்ந்து, அவரது தோழியான சசிகலா அதிமுகவை கைப்பற்றி முதல்வராக பதவி ஏற்க ஆசைகொண்டார். அதன் காரணமாக, முதலில் அதிமுகவின் பொதுச்செயலாளராக தனது ஆதரவாளர்களை கொண்டு தேர்வானதாக அறிவிக்கப்பட்டார்.

பின்னர், அதிமுகவின் முதல்வராக இருந்த ஓபிஎஸ்சை மிரட்டி, ராஜினாமா செய்ய வைத்துவிட்டு, சட்டமன்ற கட்சி குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, தன்னை முதல்வராக பதவி ஏற்க அழைக்க வேண்டும் என்று கவர்னரை வற்புறுத்தி வந்தார்.

இதற்கிடையில் சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதி மன்றம் உறுதி செய்ததை தொடர்ந்து,

அவர் பெங்களூரு ஜெயிலுக்கு செல்வதற்கு முந்தைய நாள் இரவில், தனது அக்காள் மகனான, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி.தினகரனை, கட்சியில் இணைப்பதாகவும், அவருக்கு உடனே அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டதாகவும் அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

தற்போது டிடிவி தினகரன் அதிமுக பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். அவருக்கு தற்போது ‘மக்கள் செல்வர்’ டிடிவி தினகரன் என்று பட்டம் கொடுத்து சென்னை முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது.

இந்த போஸ்டரை காணும் அதிமுக தொண்டர்கள் காரி உமிழ்கிறார்கள். ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து விரட்டப்பட்ட ஒருவர் எப்படி மக்கள் செல்வராக முடியும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

யார் ‘மக்கள் செல்வர்’ என்றும், மக்களுக்கு யாரென்றே தெரியாத, மக்கள் செல்வாக்கற்ற தினகரன் மக்கள் செல்வரா என்று குமுறி வருகிறார்கள்.

இதுகுறித்து சமூக வலைதளங்களிலும் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்.

அதிமுக தொண்டர்கள் எவரும் சசிகலா குடும்பத்தினரை விரும்பாத நிலையில், பதவியை தக்க வைத்துக்கொள்ள ஆசைப்படும் அமைச்சர்கள் மட்டுமே சசிகலா குடும்பத்தினருக்கு ஆதரவாக கூப்பாடு போட்டு வருகின்றனர்.

சசிகலாவை எதிர்த்து அரசியல் செய்து வரும் ஓபிஎஸ்-சுக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், அதிமுக தொண்டர்களின் ஆதரவை பெற சசிகலா தரப்பினர் கடும் முயற்சி எடுத்து வருகின்றனர்.

இதுபோன்ற போஸ்டர்களை காணும் பொதுமக்கள் முணுமுணுத்தவாறே செல்கிறார்கள்….

முகநூல் பதிவு