டொரண்டோ, 

அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் நாட்டின் மலாலா யூசுப்பிற்கு கனடா கௌரவ குடியுரிமையை வழங்கியுள்ளது. பெண்கள் மற்றும் சிறுவர் கல்வி தொடர்பாக குரல் கொடுத்து வந்தவர் மலாலா.

இதனால் ஆத்திரமடைந்த தாலிபான்கள் இவரைத் துப்பாக்கியால் சுட்டனர்.

தலையில் படுகாயமடைந்த மலாலா இங்கிலாந்தில் தங்கி சிகிச்சை பெற்றார். இந்த நிலையில், அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.  அதனைத் தொடர்ந்து, ஐக்கிய நாட்டு சபையின்  இளைய அமைதித் தூதராக  சிலதினங்களுக்குமுன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தற்போது,  கனடா அவருக்கு கௌரவ குடியுரிமை வழங்கி கௌரவித்துள்ளது. லிபரல் கட்சியின் பிரதமர் ஜஸ்டின் டுருடோ தலைமையிலான ஆட்சி உலக நாடுகளின் அகதிகளை வரவேற்று வாழ்வளித்து வருகிறது. இலங்கைத் தமிழர் கனடாவில்தான் அதிகளவில் வசித்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சிரியா உள்பட ஏழு முஸ்லிம் நாடுகளின் அகதிகளுக்கு தடைவிதித்தார்.

அப்போது கனடா பிரதமர்டுருடோ பெருந்தன்மையுடன், தங்கள் நாட்டுக்கு வரும்படி அகதிகளுக்கு ட்விட்டரில் அழைப்பு விடுத்தார். அதையடுத்து  சிரியாவிலிருந்து 25 ஆயிரம் அகதிகள் கனடாவில் தஞ்சமடைந்தனர்.

டொரண்டோவில் நேற்று  நடைபெற்ற பிரமாண்ட விழாவில்  கவுரவ குடியுரிமை விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய மலாலா, உலகில் பாதுகாப்பற்ற குழந்தைகளை வரவேற்க உங்கள் கதவுகளும், இதயங்களும் எப்போதும் திறந்திருக்கவேண்டும் என கூறினார்.

தென்னாபிரிக்காவின் முன்னாள் குடியரசுத்தலைவர் நெல்சன் மண்டேலா, மியன்மாரின் ஆங்சான் சூகி போன்ற சில உலக தலைவர்களுக்கு மாத்திரமே இந்த கௌரவத்தை கனடா அளித்துள்ளது.