கோலாலம்பூர்: பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நிகழ்த்தும் ஒடுக்குமுறைகள் மற்றும் அநீதிகளைக் கண்டு மலேசியா இனிமேலும் அமைதியாக இருக்காது என்று எச்சரித்துள்ளார் அந்நாட்டின் பிரதமர் மகாதீர் முகமது.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவான உலக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார் மகாதீர் முகமது.

அவர் பேசியதாவது, “நாங்கள் எப்போதும் கடமை உணர்வுடன் செயல்படுகிறோம். தங்களை நீதி மற்றும் சுதந்திரத்தின் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்ளும் பலம் பொருந்திய நாடுகள், குற்றங்கள் நடக்கும்போது அவற்றைக் கண்டு அமைதி காக்கையில், நமது கடமை அதிகரிக்கிறது.

வேறொரு நாட்டிற்குச் சொந்தமான நிலப்பகுதியில் குடியிருப்புகளை நிர்மாணித்து, அது தங்களுடைய பகுதி எனச் சொந்தம் கொண்டாடும் இஸ்ரேலின் வழக்கம் உலகின் வேறு எந்த நாட்டின் வரலாற்றிலும் காணப்படாத ஒன்று.

தொடர்ந்து இதுவரை இஸ்ரேல் ராணுவத்தால் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் ராணுவ நீதிமன்றங்களால் அவர்கள் தண்டிக்கப்படும் கொடுமையும் நடக்கிறது.

இவ்வாறு கைது செய்யப்படும் பாலஸ்தீன குழந்தைகளைப் பயன்படுத்தி, பாலஸ்தீனத்தால் சிறைபிடிக்கப்படும் தங்கள் வீரர்களை இஸ்ரேல் விடுவித்துக் கொள்வது கண்கூடாகத் தெரிகிறது. இவை அனைத்துக்காகவும் இஸ்ரேல் கண்டிக்கப்படவும் தண்டிக்கப்படவும் வேண்டும்.

இஸ்ரேலின் அநியாயங்களைக் கண்டு நாம் இனியும் அமைதி காத்தால், பாவப்பட்ட பாலஸ்தீனர்களின் ரத்தம் நம் கரங்களில் படர்ந்துவிடும்” என்றுள்ளார் மகாதீர் முகமது.