சட்டவிரோத தொழிலாளர்களுக்கு அமலாக்க அட்டை…..மலேசியா புது திட்டம்

ஷாஆலம்:

சட்டவிரோதமாக உள்ள வெளிநாட்டு தொழிலாளர்களை வரும் பிப்ரவரி 15ம் தேதி முதல் அமலாக்க அட்டை (இ காட்) வழங்க மலேசியா அரசு முடிவு செய்துள்ளது. இந்த தற்காலிக சட்டப்பூர்வ நடவடிக்கையின் கீழ் வழங்கப்படும் அட்டை 2018ம் ஆண்டு பிப்ரவரி வரை செல்லத்தக்கதாகும்.

இது குறித்து மலேசியா குடியேற்ற துறை இயக்குனர் தலைவர் தாதூக் செரி முஸ்தபார் அலி கூறுகையில், இந்த திட்டத்தில் வேலை அளிப்பவரும், சட்டவிரோத தொழிலாளர்களும் வரும் ஜூன் 30ம் தேதி வரை அமலாக்க அட்டை பெற விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு நீட்டிப்பு செய்ய முடியாது. இந்த அட்டை வழங்கப்பட்ட பிறகு ஒரு ஆண்டிற்குள் அந்த தொழிலாளர்கள் சம்மந்தப்பட்ட தூதரகங்கள் மூலம் பாஸ்போர்ட் மற்றும் பணி விசா பெற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த அமலாக்க அட்டை காலாவதியான பிறகு வேலை அளிப்பவர் மீதும், சட்ட விரோத தொழிலாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்சாலைகள், கட்டுமானம், சேவை தொழிற்சாலைகள், வேளாண் பணி போன்றவற்றில் ஈடுபட்டுள்ள 4 முதல் 6 லட்சம் தொழிலாளர்கள் விண்ணப்பம் செய்வார்கள் என அரசு எதிர்பார்க்கிறது.

இலவசமாக வழங்கப்படும் இந்த அட்டையில் பாதுகாப்பு காரணங்களுக்காக தொழிலாளர்கள், வேலை அளிப்பவரது பயோ மெட்ரிக் தகவல்கள் பதிவு செய்யப்படும். இந்த பணி மேற்கொள்ள 2 நாட்களாகும். குடியேற்ற துறை தலைமை அலுவலகம், பெனின்சுலாரில் உள்ள அரசு அலுவலகங்களில் இதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கும். குடியேற்ற துறை நேரடியாக இந்த அட்டை வழங்குகிறது. அதனால் இடைத்தரகர்கள் இன்றி நிறுவனங்களும், தொழிலாளர்களும் விண்ணப்பிக்கலாம் என்றார்.