கோலாலம்பூர்:

கொரோனா வைரஸ் மிரட்டல் காரணமாக  மலேசியாவில் நடைபெற இருந்த அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,  ஈப்போவில் ஏப்ரல் 11ந்தேதி தொடங்க இருந்த போட்டிகள் செப்டம்பர் மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.

மலேசியாவில் நடைபெற இருந்த அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் ஏப்ரல் 11ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது உலக நாடுகள் கொரோனா வைரஸ் பீதியில் சிக்கி தவிப்பதால், விளையாட்டு போட்டிகள் 6 மாத காலங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கூறியுள்ள  மலேசியா ஆர்கனைசிங் கமிட்டியின் தலைவர் டத்தோ ” ஹாஜி அப்த் ரஹீம், “29வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி 2020 ஒத்திவைக்கப்படுகிறது. இது வீரர்கள், அதிகாரிகள் மற்றும் அனைத்து தரப்பினரின் நலனுக்காக இந்த முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

“கொரியா மற்றும் ஜப்பானில் வேகமாக பரவி வரும் கோவிட் -19, அணிகளின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு மற்றும், குறிப்பாக ஆஸ்திரேலியா, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள்  டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள உள்ள நிலையில், அவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதையும் கவனத்தில் கொள்ளப்பட்டு, தேதிகள் மாற்றப்பட்டு உள்ளது.

உலகம் தற்போது சந்தித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடியை கவனத்தில்கொண்டு இந்தமுடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்காக உலக நாடுகளிடம் மன்னிப்பு கோருவதாகவும் கூறி உள்ளது.

மலேசியாவின் ஈப்போவில் ஏப்ரல் 11ந்தேதி முதல் 18ந்தேதி வரை நடைபெறவிருந்த இந்த போட்டி இப்போது செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 3 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

“இந்த முடிவு FIH (சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு), AHF (ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு), MHC (மலேசியா ஹாக்கி கூட்டமைப்பு) மற்றும் பங்கேற்கும் அணிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றும் கூறப்பட்டு உள்ளது.

அஸ்லான் ஷா கோப்பை போட்டி என்பது ஆண்டுதோறும் ஆண்கள் அணியினர் கலந்துகொள்ளும் சர்வதேச ஹாக்கி போட்டியாகும். இந்த போட்டியில்,  இந்தியா, தென் கொரியா, கனடா, ஜப்பான், மலேசியா, போலந்து என பல நாடுகளில் அணிகள் பங்கேற்கிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு முறை லீக் சுற்றில் மோதும்.

ஆனால், இந்த ஆண்டு இந்தியா பங்கேற்காத நிலையில், ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், புரவலன் மலேசியா, பாகிஸ்தான் மற்றும் தென் கொரியா. அணிகள் பங்கேற்கின்றன.

இதுவரை நடைபெற்ற அஸ்லான் ஷா கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா 10 முறை பட்டத்தை வென்றுள்ளது, அடுத்து இந்தியா4 முறையில்,  பாகிஸ்தான் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

அதுபோல,  ஏப்ரல் 19 ஆம் தேதி ஷாங்காயில் ஃபார்முலா ஒன்சீன கிராண்ட் பிரிக்ஸ் போட்டி நடைபெறுவதும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

மேலும், மார்ச் 22 முதல் 29 வரை தென் கொரியாவில் நடைபெறவிருக்கும் ஆசிய குத்துச்சண்டை தகுதி போட்டி, உலக அட்டவணை டென்னிஸ் சாம்பியன்ஷிப், உலக ரக்பி செவன்ஸ் தொடர் போன்றவை,  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சில உலகளாவிய விளையாட்டு போட்டிகள் ஆகும்.