மலேசியா : இந்திய மக்கள் நலனுக்காக புதுக் கட்சி தொடங்கும் வேதமூர்த்தி
பாஹ்ரூ, மலேசியா
மலேசியாவில் உள்ள இந்திய மக்களின் நலனுக்காக மக்களவை உறுப்பினர் வேதமூர்த்தி புதிய கட்சி ஒன்றை தொடங்க உள்ளார்.
மலேசியா வாழ் இந்தியரான வேதமூர்த்தி பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார். அவர் மலேசியாவில் உள்ள இந்தியர்களின் நலனுக்காக மிகவும் தொண்டாற்றி வருவது தெரிந்ததே. இவர் நேற்று பாஹ்ரூ நகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் இந்துராஃப் அமைப்பின் தலைவரான மோகன் உடன் இருந்தார்.
வேதமூர்த்தி செய்தியாளர்களிடம், “மலாய் மக்களின் நலனுக்காக ஒரு கட்சி உள்ளது. அதே போல இஸ்லாமிய மக்கள் நலனுக்காக கட்சிகள் உள்ளன. அதே போல் இந்திய மக்களின் நலனுக்காக மலேசிய முன்னேற்றக் கட்சி (MALAYSIAN ADVANCEMENT PARTY) என ஒன்றை தொடங்க நான் விண்ணப்பித்துள்ளேன்.
கடந்த 2005 ஆம் வருடம் அமைக்கப்பட்ட இந்துராஃப் என்னும் அமைப்பு ஏற்கனவே இந்தியர்களின் உரிமைக்காக பாடுபட்டு வருகிறது. குறைந்த ஊதியம் ஈட்டும் பல இந்தியர்கள் இந்த அமைப்பின் மூலம் பலன் அடைந்து வருகின்றார்கள். அவர்களுக்கு ஒரு தனி பிரதிநிதி தேவை, அதற்காக இந்த அரசியல் கட்சி தொடங்கப்பட உள்ளது.
தற்போது இந்த கட்சியின் அங்கீகாரத்துக்காக விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்போது இந்தக் கட்சியின் செயல்பாடு குறித்து எதுவும் சொல்ல இயலாது. அரசின் அங்கீகாரம் கிடைத்த பிறகு இதை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்த பிறகே கட்சியின் செயல்பாடுகள் குறித்து கூற முடியும்: என தெரிவித்துள்ளார்.