கோலாலம்பூர்

லேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் ஊழல் குற்றச்சாட்டு வழக்கு ஒன்றில் 12  ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.

மலேசிய நாட்டின் பிரதமராக நஜீப் ரசாக் பதவி வகித்து வந்தார்.  இவருடைய தனிப்பட்ட வங்கிக் கணக்கில் மலேசிய மேம்பாட்டு நிதியில் இருந்து 267 கோடி மலேசியன் ரிங்கிட் அதாவது ரூ.4150 கோடி பணம் செலுத்தப்பட்டதாக புகார் எழுந்தது.   இதை ஆய்வு செய்த ஊழல் தடுப்புத் துறையினர் இந்த குற்றச்சாட்டுக்கு  ஆதாரம் உள்ளதாகக் கூறி அவரை 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையில் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.  அதையொட்டி நேற்று மலேசிய நீதிமன்ற நீதிபதிகள் முகமது கஸ்லான் மற்றும் முகமது காஸ்லி ஆகியோரின் அமர்வு முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்குக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உள்ளது.  குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் தண்டனை வழங்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மலேசிய நாட்டு முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் இந்த தீர்ப்பு குறித்து, “இந்த தீர்பு ஏற்க முடியாத தீர்ப்பு ஆகும்.  இந்த தீர்ப்பு முடிவானது இல்லை.  தீர்ப்பை எதிர்த்து நாங்கள் மேல்முறையீடு செய்ய உத்தேசித்துள்ளோம்.   மேல் முறையிட்டு வழக்கில் நாக்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என நாங்கள் நம்புகிறோம்” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.