பிரான்ஸ் கத்திக்குத்து குறித்த மலேசிய முன்னாள் பிரதமர் கருத்து : டிவிட்டரில் சர்ச்சை

கோலாலம்பூர்

பிரான்ஸ் நாட்டில் நடந்த கத்திக்குத்து சம்பவம் குறித்து மலேசியப் பிரதமர் டிவிட்டரில்  தெரிவித்த கருத்து சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.

பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் உள்ள தேவாலயத்தில் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் கத்தியால் குத்தப்பட்டு மரணம் அடைந்தனர்.  காயங்களுடன் அங்கிருந்து தப்பிய மற்றொரு பெண் அருகில் உள்ள தேனீரகத்தை அடைந்து மரணம் அடைந்துள்ளார்.    இந்த கத்திக்குத்தை நிகழ்த்திய நபரை காவல்துறையினர் பிடித்த போது அவர் அல்லாஹூ அக்பர் எனக் கோஷமிட்டதாகக் கூறப்படுகிறது.

இதையொட்டி பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங், “இந்த சம்பவ,ம் இஸ்லாமிய பயங்கர வாதம்,.  இந்த தாக்குதல் மூலம் பிரான்ஸ் நாட்டின் மதிப்புக்கள் மற்றும் கோட்பாடுகளைப் பலவீனப்படுத்த முடியாது.  நாட்டில் இஸ்லாமிய பயங்கர வாதம் அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்தார்.

இது குறித்து மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.  அவர் தனது டிவிட்டரில், “வரலாற்றில் பல இஸ்லாமியர்களை கொன்ற நாடு பிரான்ஸ் ஆகும். அதன் மீது தற்போது இஸ்லாமியர்கள் கோபத்தை காட்டுவதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது” எனப் பதிந்தார்.

மேலும், “சில தினங்களுக்கு முன்பு நபிகள் நாயகத்தை இழிவாகச் சித்திரித்த கேலிச் சித்திரத்தை  காட்டிய ஆசிரியரை ஒரு பள்ளி மாணவர் தலையைக் கொய்து கொன்றுள்ளார்.  எனவே அனைத்து கலாச்சாரத்தையும் இனியாவது அதிபர் இமானுவேல் மதிக்கக் கற்க வேண்டும்.  மேற்கத்திய நடைமுறைகளை மக்கள் மீது திணிக்கக் கூடாது” எனவும் அவர் 13க்கும் அதிகமான பதிவுகளைப் பதிந்துள்ளார்

இதையொட்டி டிவிட்டரில் கடும் சர்ச்சை எழுந்தது.   அவருக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு பதிவுகள் நூற்றுக் கணக்கில் பரவின.  இதற்கிடையில் மகாதீர் முகமது வின் பதிவுகள் டிவிட்டர் விதிகளை மீறி உள்ளதாக டிவிட்டர் நிர்வாகம் முடக்கி உள்ளது.   ஆயினும் அவர் கருத்து குறித்த சர்ச்சை தொடர்கின்றது.