50 நாட்களுக்கு பிறகு கடையைத் திறந்த தோல் பொருள் விற்பனையாளருக்கு அதிர்ச்சி…

கோலாலம்பூர்:

தோல் பொருட்கள் அனைத்திலும் பூஞ்சை படிந்ததால், 50 நாட்களுக்கு பிறகு கடையை திறந்தவர் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பல நாடுகளில் வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவைகள் மூடப்பட்டன. சுமார் 2 மாதங்கள் ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாவதால், பல நடுகள் ஊரடங்கை தளர்த்தத் தொடங்கியுள்ளன. ஆனாலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மலேசியாவில் ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வை அடுத்து, சில பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் திறக்கப்பட்டுள்ளன. அவ்வாறு, பாலு டிக்கூஸ் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் தோல் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்திவந்தவர், 50 நாட்களுக்கு பிறகு தன் கடையை திறந்துள்ளார். ஆனால், அவரது கடையில் வைக்கப்பட்டிருந்த லெதர் ஷூ, லெதர் பைகள் உள்ளிட்டவை பூஞ்சை படிந்து கடுமையாக பாதிப்படைந்துள்ளன.

சுமார் 2 மாத காலங்கள் கடை மூடப்பட்டிருந்ததாலும் AC போடாமல் இருந்ததாலும் காற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாக தோல் பொருட்களில் பூஞ்சை படிந்ததாக கூறப்படுகிறது. எனினும் தோல் பொருட்களில் இவ்வாறு படிந்துள்ள பூஞ்சையை சுத்தம் செய்துகொள்ளலாம் எனவும் இதனால் பொருளுக்கு எந்தவித சேதமும் ஏற்படாது எனவும் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.