மலேசிய எல் டி டி இ ஆதரவாளர்கள் 12 பேர் கைது : பண விவகாரம் தொடர்பு குறித்து விசாரணை

கோலாலம்பூர்

லேசியாவில் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டு இதில் உள்ள பண விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் சிலர் மலேசியாவில் இயங்கி வருவதாக மலேசிய அரசுக்குத் தகவல்கள் வந்துள்ளன.  இதையொட்டி மலேசியக் காவல்துறையினர் சிலரைக் கண்காணித்து வந்ததாகக் கூறப்படுகிறது.  அதையொட்டி விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   இவ்வாறு மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது

மலேசியச் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சாமிநாதன் மற்றும் குணசேகரன் உள்ளிட்ட 7 பேர் முதலில் கைது செய்யப்பட்டனர்.  இது உலக அளவில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  அத்துடன் பினாங்கு துணை முதல்வர் ராமசாமி உள்ளிட்ட சிலரும் கைது செய்யப்படலாம் என்னும் செய்தி வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  அதன் பிறகு பினாங்கு மற்றும் சிலாங்கூரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அதன் பிறகு ஆசிரியர் ஒருவரும் மாநில அரசின் தகவல் தொடர்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது கைது செய்யப்பட்ட ஒருவருடன் அமைச்சர் குலசேகரன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  விரைவில் குலசேகரன் கைது செய்யப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.   மலேசிய பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறை அதிகாரி அயூப்கான் மைதீன் பிச்சை, ” ஈழத் தமிழர்களுக்கு அனுதாபம் காட்டுவதும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தருவதும் ஒன்று அல்ல. பாலஸ்தீனத்தின் மீது அனுதாபம் காட்டலாம். ஆனால் இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவு தருவதை ஏற்க முடியாது.

செயல்படாமல் இருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி உதவி அளித்தது. நிதி திரட்டியது என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு வீரவணக்கம் நிகழ்ச்சியை நடத்திய 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டோரில் சமூக வலைத்தளங்களில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பதிவிட்டவர்களும் உண்டு. அவர்களிடம் இருந்து புலிகள் இயக்க கொடிகள், புத்தகங்கள், சுவரொட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளுடன் யார் தொடர்பு வைத்திருந்தாலும் கைது செய்யப்படுவார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.

மலேசியக் காவல்துறையினர் எல் டி டி இ இயக்கத்துக்கு நிதி உதவி திரட்டி உள்ளதாக இந்த 12 பேர் மீது சந்தேகம் கொண்டுள்ளனர்.  ஏற்கனவே கடந்த 1980 முதல் 2009 வரை இந்த ஆதரவாளர்கள் நிதி திரட்டி விடுதலைப் புலிகளுக்கு அனுப்பி உள்ளதற்கான ஆதாரங்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.   மேலும் இவ்வாறு தற்போது திரட்டப்பட்ட பணம் எங்குள்ளது என்பதைக் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று  வருகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 12 arrested, connection, LTTE, malaysia, Money collected
-=-