மலேசியா: நஜீப் ரசாக் மீது அதிகார துஷ்பிரயோகம், நம்பிக்கை மீறல் வழக்குப் பதிவு

கோலாலம்பூர்:

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக கடந்த 3ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் ஒரு நாள் இரவு முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டு மறுநாள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். பல கோடி டாலர் ஊழல் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

மேலும், நம்பிக்கை மீறல், அதிகார துஷ்பிரயோகம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் நாட்டை விட்டு வெளியேறவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை வரும் பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியா நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்று மகாதீர் முகமது பிரதமராக பதவி ஏற்றார். தேர்தலுக்கு முன்னரே நஜீப் ரசாக் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டது. இதை ரசாக் தொடர்ந்து மறுத்து வந்தார். தேர்தல் தோல்விக்கு பின்னர் அவர் நாட்டை விட்டு குடும்பத்தோடு வெளியேற திட்டமிட்டிருந்தார். இதை மோப்பம் முடித்த போலீசார் அவரது பாஸ்போர்ட்டை முடக்கி தடுத்துவிட்டனர்.

அவரது வீடு, அலுவலகங்களில் போலீசார் சோதனையிட்டனர். அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியானது. கடந்த 3ம் தேதி நஜீப் ரசாக் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.