மாலத்தீவு அதிபர் தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது அபார வெற்றி..! அதிபர் யாமீன் படுதோல்வி

மாலே:

மாலத்தீவில் நேற்று நடைபெற்ற  அதிபர் தேர்தலில், அதிபர் அப்துல்லா யாமீனை எதிர்த்து போட்டியிட்ட இப்ராகிம் முகம்மது அபார வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெற்காசிய நாடான மாலத்தீவில் ஏற்பட்டிருந்த  அரசியல் குழப்பங்களுக்கு இடையே  நேற்று அதிபர் தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் மாலத்தீவு முன்னேற்ற கட்சி சார்பில் அதிபர் அப்துல்லா யாமீனும், மாலத்தீவு ஜனநாயக கட்சி சார்பில் இப்ராகிம் முகமதுவும் போட்டியிட்டனர்.  விறுவிறுப்பான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில், இரவே வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.

1,192 குட்டித் தீவுகளை கொண்டது மாலத்தீவு.அங்கு கடந்த சில மாதங்களாக அரசியல் குழப்பம் நீடித்து வந்தது. அந்த நாட்டு அதிபராக முகமது யாமீன் இருந்து வந்தார். முறைகேடில் ஈடுபட்டதாக அவரது ஆட்சியில், முன்னாள் அதிபர் முகமது நஷீத் உள்ளிட்ட 9 அரசியல் தலைவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், இதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில், அவர்கள் 9 பேரையும்  விடுதலை செய்ய, அந்நாட்டின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் உச்சநீதி மன்ற தீர்ப்பை ஏற்க அதிபல்  அப்துல்லா யாமீன் மறுத்துவந்தார்.  தனக்கு எதிராக  தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இதனால் நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மீதிமிருந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் விடுதலை உத்தரவை திரும்ப பெற்றனர்.

இந்த பரபரப்பான சூழலில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிபர் அப்துல்லா யாமீனுக்கும், எதிர்க்கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டு இருந்த இப்ராகீம் முகம்மதுக்கும் நேரடி போட்டி நிலவியது. அங்கு 89.22 சதவிகித வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில், மொத்த வாக்காளர்களில் 58.3 சதவீத வாக்குகள் பெற்று இப்ராகீம் முகம்மது வெற்றி பெற்றதாக மாலத்தீவு தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

மாலத்தீவில் மொத்தம் 2,62,135 பேர் வாக்களிக்க தகுதி பெற்ற நிலையில், 2,33,877 வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்திருந்தனர். இதில் மாலைதீவு ஜனநாயகக் கட்சி வேட்பாளர் எம்.பி. இப்ராகிம் முகமது சோலிஹ்  1,33,616 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மாலத்தீவின் தற்போதைய அதிபர்,, யாமீன் 95,526 ஓட்டுகளும் பெற்று தோல்வியை சந்தித்தார்.

பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் இப்ராகிம் முகமது  வெற்றி பெற்றார். இதை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த இப்ராகீம் முகம்மது,  மக்களின் விருப்பத்தை மதித்து, மென்மையாகவும், சமாதானமாகவும் அதிகாரத்தை மாற்ற யாமீனை சந்தித்து பேசினேன்” என்றும் கூறினார்.