மாலத்தீவு அதிபர் இன்று இந்தியா வருகை

டில்லி

மாலத்தீவு அதிபர் முகமது சோலி மூன்று நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகிறார்.

கடந்த 2013ல் மாலத்தீவு அதிபராக பதவி ஏற்ற அப்துல்லா யாமின் முன்னாள் அதிபர் முகமது நசீத் உள்ளிட்ட 9 அரசியல் தலைவர்களை சிறையில் அடைத்தார். அவர்களை விடுவிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகளை பதவியில் இருந்து நீக்கினார். இதனால் மாலத்தீவில் பெரும் போராட்டங்கள் நிகழ்ந்தன. அதன் பிறகு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற முகமது சோலி சமீபத்தில் மாலத்தீவு அதிபராக பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார்.

இப்ராகிம் முகமது சோலி மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக தனது மனைவி பஸ்னா அகமது உடன் இன்று இந்தியா வருகிறார். சோலி தனது சுற்றுப்பயணத்தின் போது மாலத்தீவு – இந்தியா இடையிலான உறவை மேம்படுத்த பிரதமர் மோடியை திங்கட்கிழமை (நாளை) சந்திக்க உள்ளார். அதை தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் அவர் சந்தித்து பேசுகிறார்.

அத்துடன் முகமது சோலி இந்த பயணத்தின் போது துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, வெளியுறவுத் துறை அமைச்ச்ர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். வரும் செவ்வாய்க்கிழமை அன்று தாஜ்மகாலை முகமடு சோலி கண்டு களிக்க உள்ளார். அதற்குப் பிறகு அவர் மாலத்தீவுக்கு திரும்பி செல்கிறார்.