எங்கள் நாட்டின் மீது போரா?: சுவாமி ட்விட்டுக்கு மாலத்தீவு கடும் கண்டனம்

மாலத்தீவில் அதிபர் தேர்தலில் முறைகேடு நடைபெற்றால், அந்நாட்டின் மீது படையெடுக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்ததற்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்திய தூதரை அழைத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளுள் ஒன்றான மாலத்தீவில் யாமீன்  அதிபராக இருக்கிறார். இவரது அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களை விடுதலை செய்யும்படி, யாமீனுக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மாலத்தீவில் கடந்த பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி நெருக்கடி நிலையை அதிபர் யாமீன் பிரகடனம் செய்தார். இதைத் தொடர்ந்து, மாலத்தீவு- இந்தியா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இருப்பினும், மாலத்தீவில் 45 நாள்களுக்குப் பிறகு நெருக்கடி நிலை திரும்பப்  பெறப்பட்டது. மேலும், செப்டம்பர் 23ஆம் தேதி அங்கு தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில்  இலங்கையில் மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத்தை பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி   சில தினங்களுக்கு முன்பு சந்தித்துப் பேசினார்.

முகமது நஷீத் – சுவாமி – யாமீன்

அதன் பின்னர், சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “மாலத்தீவில் நடைபெறவிருக்கும் தேர்தலில் முறைகேடு நடைபெறலாம் என்று நஷீத் அச்சம் தெரிவித்தார். நமது அண்டை நாடான மாலத்தீவில் தேர்தல் முறைகேடு நடப்பதை இந்தியா அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு நடைபெற்றால், அந்நாட்டின் மீது இந்தியா போர் தொடுக்க வேண்டும். மாலத்தீவு அதிபர் யாமீன், இந்தியர்களை அவமதிக்கிறார்” என்று அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டருந்தார். இந்த ட்விட்டர் பதிவை மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நசீத்தும் பகிர்ந்திருந்தார்.

சுவாமியின் கருத்து அரசியல் மட்டத்தில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. சுப்பிரமணியன் சுவாமியின் ட்விட் குறித்து டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், “சுசுப்பிரமணியன் சுவாமி வெளியிட்ட கருத்துக்கும், இந்திய அரசுக்கும் தொடர்பில்லை. அது அவரது சொந்த கருத்து” என்றார்.

இந்த நிலையில், மாலத்தீவுக்கான இந்திய உயர் ஆணையரை (தூதர்) அகிலேஷ் மிஸ்ராவை அந்நாட்டு வெளியுறவுத் துறை சம்மன் அனுப்பி வரவழைத்தது.

அவரிடம், “மாலத்தீவு இறையான்மை உள்ள தனி நாடு. இங்கு தேர்தல் முறையாக நடக்கும்.

இந்த நிலையில் எங்கள் நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடும்படியும், போர் தொடுக்கும்படியும் இந்திய ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் சமூகவலைதளத்தில் பகிரங்கமாக பதிவிட்டதை கடுமையாக கண்டிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.