டில்லி

ராணுவத்தில் பெண்கள் அதிகாரிகள் ஆவதை மற்ற வீரர்கள் ஒப்புக் கொள்வதில்லை என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

                                                            மாதிரி புகைப்படம்

ஆணுக்குப் பெண் சமம் என அந்தக் காலத்திலேயே  புரட்சிக் கவி பாரதியார் பாடி உள்ளார்.    தற்போது உலகெங்கும் தற்போது பெண்கள் அனைத்து பணிகளையும் செய்து வருகின்றனர்.   அவ்வகையில் இந்தியாவிலும் பல துறைகளில் பெண்களும் ஆண்களுக்குச் சமமாக இடம் பெற்று வருகின்றனர்.   தலைமைப் பதவி வகிப்பதிலும் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர்

சமீபத்தில்  ராணுவத்தில் பெண் அதிகாரிகள் குறித்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.   அந்த விளக்கத்தில், “ராணுவத்தில் தலைமைப் பதவிகளுக்கு பெண்கள் சரியாக இருக்க மாட்டார்கள்.   இதற்கு முக்கிய காரணம் ஆண் வீரர்கள் பெண்களை அதிகாரிகளாக ஒப்புக் கொள்வதில்லை என்பதே ஆகும்.

பெரும்பாலான ராணுவ வீரர்கள் கிராமப்புறத்தில் இருந்து வருகின்றனர். எனவே அவர்களால் பெண்கள் அதிகாரத்தை ஒப்புக் கொள்வதில் மனதளவில் சிரமம் உண்டாகிறது.   எனவே பெண்கள் அதிகாரிகளாக நியமனம் செய்யும் போது பல நேரங்களில் அவர்களால் ஆண் வீரர்களிடம் இருந்து பணிகளைப் பெறுவதில் அதிகம் சிரமம் ஏற்படுகிறது.

அது மட்டுமின்றி ஆபத்தான ராணுவப் பணிகளில் சிலவற்றுக்குப் பெண்களை அமர்த்த முடியாத நிலை உள்ளது. தவிர பெண்களுக்கு மகப்பேறு, தாய்மை, குடும்பப் பொறுப்பு என பலவற்றையும் பார்த்துக் கொள்ள வேண்டியது உள்ளது.  ராணுவ அதிகாரிகளுக்கு அதிக அளவில் வேலைப்பளு, மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதால் பெண்களை அதிகாரிகளாக நியமிப்பதில் சிக்கல் உள்ளது.

தற்போது ராணுவத்தினரிடையே உள்ள மன நிலையை வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  ராணுவ வீரர்களின் மனதில் காலப்போக்கில் மாறுதல் ஏற்படும் வரை நாம் பெண் அதிகாரிகளை நியமிப்பதில் எளிதாக இருக்காது.   அது வரை காத்திருக்க வேண்டும்” எனக் கூறி உள்ளது.