மலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளியை தேர்தலில் நிறுத்திய பாரதீய ஜனதா

போபால்: மலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் தாகூர், போபால் மக்களவைத் தொகுதியில், பாரதீய ஜனதா சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தீவிரவாத தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைவாசம் அனுபவித்தவர், ஒரு முக்கிய பெரிய கட்சியால் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்படுவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

சாத்வி பிரக்யா சிங் தாகூர் கூறியதாவது, “நான் குற்றமற்றவள் என்று நீதிமன்றம் கூறிவிட்டது. இதன்மூலம் காங்கிரசின் சதித்திட்டங்கள் அனைத்தும் தோற்றுவிட்டன.

காங்கிரஸ் என்னை மட்டும் கொடுமைப்படுத்தவில்லை. ஒரு பெண் சாமியாரை கொடுமைப்படுத்தியுள்ளது. இதன்மூலம், காங்கிரஸ் ஆட்சியில் பெண்களின் நிலை என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம்” என்றார்.

ஆனால், சாத்வி பிரக்யா தற்போது பெயிலில் மட்டுமே வெளியே வந்துள்ளார் என்றும், அவர் இன்னும் நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

– மதுரை மாயாண்டி