டில்லி

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா 77 நாட்கள் கட்டாய விடுப்பில் இருந்ததால் அவர் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார்.

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் ஆஸ்தானா ஆகிய இருவரையும் கட்டாய விடுப்பில் செல்ல மத்திய அரசு உத்தரவிட்டது.    இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அரசின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது.   அதை ஒட்டி 77 நாட்களுக்குப் பிறகு அலோக் வர்மா மீண்டும் சிபிஐ இயக்குனர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

அலோக் வர்மா மீதான புகார்கள் குறித்து சிபிஐ இயக்குனர் தேர்வுக் குழு ஒரு வாரத்தில் விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறி இருந்தது.   ஒரு வாரம் கால அவகாசம் இருந்த போதிலும் பிரதமர் தலைமையிலான இந்தக் குழு நேற்று இரவே கூடியது.   இதற்கு பாராளுமன்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைக்கப்பட்டிருந்தார்.

இந்தக் குழு எதற்காக கூடுகிறது என விவரம் அளிக்காமல் நேற்று கூடியது.   மல்லிகார்ஜுன கார்கே உச்சநீதிமன்றம் ஒருவார அவகாசம் அளித்துள்ள நிலையில் இந்தக் கூட்டம் எதற்கு கூடுகிறது என கேள்வி எழுப்பி இருந்தார்.  ஆனால் அதற்கு குழு விளக்கம் அளிக்கவில்லை.  அதனால் அந்த கூட்டத்தில் கார்கே கலந்துக் கொள்ளவில்லை.

நேற்று குழுவில் விவாதிக்கப்பட்ட விவரங்கள் குறித்து எதுவும் தகவல்கள் வெளி வரவில்லை.   இன்று இரவு அந்தக் குழு மீண்டும் கூட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.   இந்நிலையில் மல்லிகார்ஜுன கார்கே குழுவிடம் இந்த கூட்டம் குறித்து ஒரு சில விவரங்களை  கேட்டுள்ளார்.

அவர் கேட்டுள்ளதாவது :

அலோக் வர்மா மீது அளிக்கப்பட்டுள்ள புகார்களின் விவரம்

அலோக் வர்மா தன் மீதான குற்றங்கள் குறித்து குழுவின் மும் விளக்கம் அளிக்க வாய்ப்பு

வரும் ஜனவரியுடன் முடியும் அலோக் வர்மாவின் பதவிக்காலத்தை அவர் பணி இன்றி இருந்த 77 நாட்களுக்கு நீட்டிப்பது

நள்ளிரவில் அலோக் வர்மாவுக்கு பதில் இடைக்கால இயக்குனர் நியமிக்கப்பட்டது குறித்து விசாரணை

ஆகியவைகள் ஆகும்.

இது குறித்து குழு எதுவும் தெரிவிக்காமல் உள்ளது.

நேற்று மீண்டும் இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள அலோக் வர்மா இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர் ராவ் கடந்த அக்டோபர் முதல் ஜனவரி வரை அளித்த அதிகாரிகளின் பணியிட மாற்ற உத்தரவுகளை ரத்து செய்துள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.