மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க யாருடனும் விவாதிக்கவில்லை: மல்லிகார்ஜுன கார்கே

மஹாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக யாருடனும் இதுவரை விவாதிக்கவில்லை என்றும், எதிர்கட்சி வரிசையில் அமரவே மக்கள் தங்களுக்கு வாக்களித்துள்ளதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு 105 இடங்களிலும், சிவசேனாவுக்கு 56 இடங்களிலும் வெற்றி கிடைத்தது. கூட்டணியாக இரு கட்சிகளும் தேர்தலை சந்தித்து, கூட்டணி பெரும்பான்மை பலம் பெற்றுள்ள நிலையில், ஆட்சியில் சரிபாதி பங்கும், சிவசேனா தலைமையில் இரண்டரை ஆண்டுகள் ஆட்சி நடைபெற வேண்டும் என்கிற அக்கட்சியின் நிபந்தனையும் தொடர்ந்து ஆட்சியமைக்க இழுபறியான சூழலை ஏற்படுத்தி வருகிறது. சிவசேனாவின் இக்கோரிக்கையை மறுத்துள்ள பாஜக, 15 அமைச்சர் பதவிகளுடன், துணை முதல்வர் பொறுப்பையும் வழங்க தயாராக உள்ளதாக கூற, அதை ஏற்க சிவசேனாவும் மறுப்பு தெரிவித்துவிட்டது.

இந்த சூழலில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முற்படுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் வகையில் உத்தவ் தாக்கரேயின் நம்பிக்கைக்குறிய நபரான சஞ்சய் நாவுத், நேற்று முன்தினம் மாலை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது பாஜக அல்லாத கூட்டணி அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானாலும், இரு தரப்பும் அதை மறுத்தன. அதேநேரம், சிவசேனாவின் இத்திட்டம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக, அக்கட்சியின் முக்கிய தலைவரான பாலாசாகேப் தோரத் உள்ளிட்ட சில தலைவர்கள் தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மூத்த காங்கிரஸ் தலைவரும், மஹாராஷ்டிர காங்கிரஸ் மாநில பொறுப்பாளருமான மல்லிகார்ஜுன கார்கே, “மஹாராஷ்டிரத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக நாங்கள் யாரிடமும் இதுவரை விவாதிக்கவில்லை. எதிர்கட்சி வரிசையில் அமரவே மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். அதன்படி, எதிர்கட்சியாக அமர நாங்கள் தயாராக இருக்கிறோம். பாஜக – சிவசேனா கட்சி விவகாரம், அவர்கள் கூட்டணி பிரச்சனை. அதை அவர்களே முடிவுக்கு கொண்டுவந்துவிடுவார்கள்” என்று தெரிவித்தார்.