டெல்லி:  மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக இருந்து வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவலர் குலாம்நபி ஆசாத் ஓய்வுபெற்றுள்ள நிலையில், புதிய எதிர்க்கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையில் எதிர்கட்சி தலைவர் பதவி என்பது, மத்திய அமைச்சர்களுக்கு இணையான பதவியாகும்.   கடந்த 2015-ம் ஆண்டு ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் இருந்து ராஜ்ய சபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்  மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து வந்தார். அவரது  பதவிக் காலம் பிப்ரவரி 9ந்தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்த புதிய மாநிலங்களவை தலைவரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் கட்சி முனைப்பு காட்டி வருகிறது

இந்த நிலையில் ஓய்வுபெற்ற மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான மல்லிகார்ஜூன கார்கேவை நியமிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகவும் டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக  ராஜய்சபாவில் குலாம் நபி ஆசாத்  பிரிவுபசார விழா நடத்தப்பட்டது. விழாவில் பேசிய பிரதமர் மோடி, கர்வம் இல்லாத உயர்ந்த மனிதர்; நாட்டின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர், தனது நீண்டகால நண்பர் குலாம்நபி ஆசாத்  என கண்கலங்கினார்.  அதுபோல, பிரியாவிடை உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய குலாம் நபி ஆசாத், நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். பாகிஸ்தானுக்கு ஒரு போதும் செல்லாத அதிர்ஷ்டசாலி மக்களில் நானும் ஒருவன். பாகிஸ்தானில் நடக்கும் சில விரும்பத்தகாத விஷயங்கள் பற்றி படிக்கும் போது, நான் இந்திய முஸ்லிம் என்பதை நினைத்துப் பெருமை கொள்கிறேன் என்று உணர்ச்சிபூர்வமாக பேசியது குறிப்பிடத்தக்கது.