கொரோனா சாவு எதிரொலி: சினிமா தியேட்டர் உள்பட மக்கள் கூடும் இடங்களை மூட எடியூரப்பா அரசு உத்தரவு

பெங்களூரு:

கொரோனா பாதிப்பு காரணமாக கர்நாடக மாநிலத்தில் 76வயது முதியவர் ஒருவர் மரணமான நிலையில்,  மக்கள் அதிகம் கூடும் இடங்களான பப்புகள், மால்கள், தியேட்டர்கள், போன்றவற்றை  ஒரு வாரத்திற்கு மூட உத்தரவு முதல்வர் எடியூரப்பா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சீனாவில் இருந்து வெளியேறும் கொரோனா இந்தியா உள்பட மற்ற நாடுகளை மிரட்டி வருகிறது. இந்தியாவில் இதுவரை 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கர்நாடக மாநிலம் கல்புர்க்கியைச் சேர்ந்த 76 வயது முதியவர் ஒருவர் சமீபத்தில் உயிரிழந்தார். இவர்தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த முதல்நபர்.

இதைத் தொடர்ந்து,   மாநில தலைநகரான பெங்களூரு வீதிகளிலும், பிரபலமான கப்பன் பார்க்,லால் பார்க் போன்ற பகுதிகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடக்கின்றன.

இந்த நிலையில், மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை  மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, பள்ளிக்கூடங்களில் மாணவ மாணவிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பல ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அனுமதித்துள்ளன.

மேலும் சினிமா தியேட்டர்களிலும்  ரசிகர்கள் வருகை குறைந்துள்ளதால், புதிய திரைப்படங்கள் வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாகவும் பல தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாநில அரசு,   மாநிலத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பப்புகள், மால்கள், தியேட்டர்கள் முதலியவற்றை ஒரு வாரத்திற்கு மூட முதல்வர் எடியூரப்பா உத்தரவு பிறப்பித்துள்ளார்.