Random image

மல்லையா ஜெட்லியிடம் கூறிவிட்டே சென்றார்: சேம்சைடு கோல் போட்ட சுப்பிரமணியசாமி

டில்லி:

தான் லண்டன் செல்வதாக நிதிமந்திரி அருண்ஜெட்லியிடம் விஜய் மல்லையா கூறிவிட்டே சென்றார் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கூறி உள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கோடிக்கணக்கில் கடன்வாங்கிவிட்டு, வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பிரபல தொழிலதிபர் விஜய்மல்லயா,பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். அவரை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு லண்டன் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்க்கான இறுதி தீர்ப்பு வரும் டிசம்பர் 10 ஆம் நாள் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த விஜய் மல்லையா,  தான்  நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்த தாகவும், அப்போது, வங்கிகளுடன் சமரசம் செய்ய தயார் எனவும், கடன்களை திரும்ப செலுத்துவதாக கூறி நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன். இது தான் உண்மை. என் மனசாட்சி தெளிவாக உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அருண்ஜெட்லி மறுப்பு தெரிவித்திருந்தார். பாராளுமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பேசியதாக கூறியிருந்தார்.

இந்த  விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் அருண் ஜெட்லி ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த பரபரப்புக்கு இடையில்,  லண்டன் செல்வதாக நிதி மந்திரியிடம் மல்லையா கூறினார் என்று பாஜக மூத்த தலைவரான சுப்ரமணியன் சுவாமி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

அதில், விஜய் மல்லையா தப்பித்து சென்றதில் இரண்டு இரண்டு மறுக்கமுடியாத உண்மைகள் உள்ளன:
1:  லுக் அவுட் அறிவிப்பு. 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி அன்று அறிவிக்கபட்ட அறிக்கை மூலம்  மல்லையாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டு இருந்த  லுக் அவுட் நோட்டீஸ் நீர்த்துப்போகச்செய்யப்பட்டது. இதனால் விஜய் மல்லையா 54  பரிசோதிக்கப்பட்ட சாமான்க ளுடன் வெளியேறினார். 

2: விஜய் மல்லையா, பாராளுமன்றத்தின் மத்திய அறையில், நிதி அமைச்சரிடம் தான் லண்டன் செல்ல இருப்பதாக கூறினார்.

சுப்பிரமணியசாமியின் இந்த டிவிட் பாரதிய ஜனதா கட்சிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. நமது கட்சியில் இருந்துகொண்டே நமது அமைச்சர்களுக்கு எதிராக சுப்பிரமணிய சாமி கருத்து தெரிவித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.