திருச்சி மாநகராட்சியில் கேன்டீன் நடத்தி வருபவர், மற்ற இடங்களில் இயங்கி வரும் தனது கேன்டீன்களுக்கு தேவையான உணவுகளை இங்கிருந்து சமைத்து எடுத்து செல்வதாக புகார் எழுந்துள்ளது.

திருச்சி மாநகராட்சி அலுவலகம் பின்புறம் கேன்டீன் இயங்கி வருகிறது. இந்த கேன்டீனில் டீ, காபி, பலகாரங்கள், காலை டிபன், மதியம் சாப்பாடு விற்பனை செய்யப்படுகிறது. மாநகராட்சி பணியாளர்கள், அலுவலர்கள், மாநகராட்சி அலுவலகம் வரும் மக்களுக்காக குறைந்த விலையில் டீ, காபி, பலகாரங்கள், உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த கேன்டீன் துவங்கப்பட்டது. தற்போது அதன் நோக்கம் சிதைந்து லாபம் ஒன்றே குறிக்கோளாக இயங்கி வருகிறது. கடந்த 3 ஆண்டுக்கு முன்பு வரை பெரியதம்பி என்பவர் இந்த கேன்டீனை நடத்தி வந்தார். இவர் போடும் பட்டணம் பக்கோடா வெகு பிரபலம். மாநகராட்சி கேன்டீன் பட்டணம் பக்கோடாவை ருசிக்கவே ஒரு கூட்டம் இங்கு வரும்.

பெரியதம்பி மாநகராட்சிக்கு ரூ.20 லட்சம் வாடகை பாக்கி வைத்தார். நிலுவைத்தொகை அதிகமானதால் அவரால் செலுத்த முடியவில்லை. இதையடுத்து, சுப்பிரமணி என்பவருக்கு கேன்டீனை கைமாற்றிவிட்டார். பெரியதம்பி செலுத்த வேண்டிய வாடகை பாக்கியை சுப்பிரமணி செலுத்திவிட்டு, மாதம் ரூ.9,000 வாடகைக்கு கேன்டீனை கைப்பற்றினார்.சுப்பிரமணி கன்ட்ரோலுக்கு கேன்டீன் வந்த பிறகு, கேன்டீன் அமைப்பே மாறியது. ஆரம்பத்தில் ஓரளவு டீ, காபி, பலகாரங்கள் தரமாக இருந்தது. நாளடைவில் போன்டா, சமோசா, வடையின் அளவு சுருங்கி, விலையும் அதிகமானது. தரமும் குறைந்தது.இது குறித்து கேன்டீன் உரிமையாளர் சுப்பிரமணியிடம் பலமுறை மாநகராட்சி அலுவலர்கள் முறையிட்டும் பயனில்லை. பொதுமக்கள் முறையிட்டால் சற்றே கடினமான தடித்த வார்த்தைகளால் மிரட்டும் தொணியில்தான் கேன்டீனில் உள்ளவர்கள் பேசுகின்றனர்.

தவிர சுப்பிரமணிக்கு சொந்தமாக மாநகராட்சி எதிரே உள்ள பொதுத்துறை வங்கி ஒன்றில் கேன்டீன் உள்ளது. அதேபோல சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் கல்லூரியிலும் கேன்டீன் நடத்தி வருகிறார். இந்த கேன்டீன்களில் விலை குறைவாக பலகாரங்கள், உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இரண்டு கேன்டீன்களுக்கும் தேவையான டிபன், சாப்பாடு போன்ற உணவுப் பொருட்களை இங்கிருந்து தான் தயார் செய்து எடுத்து செல்லப்படுகிறது. தவிர வெளி ஆர்டர்களுக்கும் உணவு தயாரிக்கப்படுகிறது. கேன்டீனுக்கு தேவையான தண்ணீர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியிலிருந்து இலவசமாக கிடைத்துவிடுகிறது. இதுதவிர இவர் பால் பாக்கெட் ஏஜென்டாக உள்ளார். இவரது பால் வண்டி நிறுத்தவும், கார், சரக்கு ஆட்டோக்களை நிறுத்துமிடமாகவும் மாநகராட்சி அலுவலகத்தை பயன்படுத்தி வருகிறார்.

மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், பிளாஸ்டிக் பொருட்களை மாநகர் முழுவதும் தடை செய்வதில் தீவிரம் காட்டுகிறார். ஆனால், மாநகராட்சி கேன்டீனில் உணவுப் பரிமாறப்படுவதே பிளாஸ்டிக் பேப்பரில்தான் என்பது ஹைலைட். தனது அலுவலகத்தில் நாள்தோறும் டன் கணக்கில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களையே மாநகராட்சி கமிஷனரால் கட்டுப்படுத்த முடியவில்லை என பொதுமக்களும், வியாபாரிகளும் வெளிப்படையாகவே கமென்ட் அடித்துச் செல்கின்றனர்.

எனவே கேன்டீனில் நடக்கும் தில்லுமுல்லுவை தடுத்து, மாநகராட்சி கேன்டீன் மாநகராட்சிக்காக மட்டுமே நடத்த வேண்டும். தரமான, சுகாதாரமான உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். வேறு தொழில் நடத்த அனுமதிக்கக்கூடாது. பார்க்கிங் பகுதியாக மாற்றாமல் இருக்கவும் மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி அலுவலர்களே வலியுறுத்தி உள்ளனர்.