செங்கல்பட்டு: கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், மாமல்லபுர சுற்றுலாத் தலங்கள் மே 15-ம் தேதி வரை மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. சென்னை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பரவல் அதிகரித்து வருகிறது. இதையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தாலும், சுற்றுலாத்தலங்களில் வார விடுமுறை நாட்களில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தல வளாகங்களில் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டு, மே மாதம் 15-ம் தேதி வரை மூடப்படுவதாகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் சுற்றுலாத் தலங்கள் மூடபட்டன. பின்னர், தொற்று குறைவினால் அரசு அறிவித்த படிப்படியான தளர்வுகள் காரணமாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ம் தேதி  சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்குத் மீண்டும் திறக்கப்பட்டன. இந்த நிலையில், தற்போது பரவில் கொரோனாவின் 2வது அலை காரணமாக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பாரம்பரிய கலைச்சின்ன வளாகங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் வரும் மே மாதம் 15-ம் தேதி வரையில் மூடப்படுவதாக தொல்லியல் துறை நேற்று (ஏப்.15) இரவு அறிவித்தது.

இதன்பேரில், மாமல்லபுரத்தில் உள்ள பல்லவ மன்னர்களின் கலைச் சின்ன வளாகங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டு, கடற்கரை கோயில், ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டை பாறை வளாகங்களுக்குச் செல்லும் நுழைவு வாயில் பகுதிகளின் கதவுகள் மூடப்பட்டன.