பிரதமர் மோடியை எதிர்த்து மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு தர்ணா போராட்டம் நடத்த திட்டம் – பரபரப்பில் டெல்லி

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை எதிர்த்து வருகிற 13 மற்றும் 14ம் தேதி மம்தா பானர்ஜி மற்றும் சந்திரபாபு நாயுடு டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்த உள்ளனர்.

மேற்கு வங்கம் மாநிலத்தில் இயங்கி வந்த சாரதா சிட்பண்ட்ஸ் மோசடியில் தொடர்புடையதாக கூறி போலீஸ் கமிஷர் ராஜீவ்குமாரை விசாரிக்க சிபிஐ நடவடிக்கை எடுத்ததற்கு அம்மாநில முதலமைச்சரான மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றில், மத்திய அரசு அத்து மீறி செயல்பட்டு அரசியல் சட்டத்தை அழிப்பதாக கூறி கொல்கத்தாவில் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார்.

Mamata

அவரின் இந்த போராட்டம் மூன்று நாட்களாக நீடித்தது. இதையடுத்து சிட்பண்ட் மோசடி குற்றச்சாட்டிற்காக ராஜீவ்குமார் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை மம்தா பானர்ஜி ஏற்றாலும், அரசியல் சட்டத்தை பாதுகாக்கவும், கூட்டாட்சி தத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவும் கோரி டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்திருந்தார். அதன்படி வரும் 13ம் தேதி பாராளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நேரத்தில் போராட்டத்தை முன்னெடுக்க மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க மற்றுபுறம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடிக்கு எதிராக வரும் திங்கட்கிழமை டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளார். ஆந்திரா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க கேட்டு வரும் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி சந்திரபாபு நாயுடு தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளார். சந்திரபாபு நடத்தும் இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக ஆந்திராவில் இருந்து தெலுங்கு தேச தொண்டர்கள் இரண்டு ரயிகளில் புறப்பட்டு சென்றுள்ளனர். இதனால் வரும் திங்கட் கிழமை டெல்லியில் பதற்ற நிலை நிலவும் என எதிரப்பார்க்கப்படுகிறது.

போராட்டத்திற்காக டெல்லியில் உள்ள ஆந்திர பவன் வளாகத்தில் சிறப்பு மேடை அமைக்கப்பட்டு வருகிறது. அந்த மேடையில் சந்திரபாபு நாயுடுவும், தெலுங்கு தேச கட்சி மூத்த தலைவர்களும் அமர்ந்து தர்ணா போராட்டத்த நடத்த உள்ளனர். சந்திரபாபு நாயுடுவின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய உள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாராளுமன்ற கூட்டத்தொடர் வரும் 13 மற்றும் 14ம் தேதிகளில் நிறைவடைய உள்ள நிலையில் ஆந்திர முதல்வரும், மேற்குவங்க முதல்வரும் போராட்டம் நடத்த உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவை போன்று மேற்கு வங்கத்தில் இருந்தும் ஆயிரக்கணகான தொண்டர்கள் டெல்லி நோக்கி படையெடுப்பதால் கூட்டத்தினரை சமாளிக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.