கொல்கத்தா: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் முன்கள பணியாளர்கள் என்ற முறையில் காவல்துறையினரை கெளரவிக்கும் விதமாக, செப்டம்பர் 1ம் தேதியை காவலர் தினமாக கொண்டாட மேற்குவங்க அரசு முடிவு செய்துள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இம்மாநில அரசு நோய் தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இருப்பினும், ஊரடங்கு காலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது, “மாநிலத்தில் இதுவரை 4000க்கும் மேற்பட்ட போலீசாருக்கு கொரோனா தொற்று இருந்தது. 18 காவல்துறையினர் கொரானாவுக்கு பலியாகியுள்ளனர்.

கொரோனா காலத்தில் முன்கள பணியாளர்களாக இருந்து வந்த அவர்களின் பங்களிப்பை பாராட்டி கெளரவிக்கும் வகையில், செப்டம்பர் 1ம் தேதியை மாநில காவலர் தினமாக அறிவித்து, அன்று நடக்கவுள்ள விழாவில் உயர்தியாகம் செய்த போலீசாரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி ஆணை வழங்கப்படும் மற்றும் காவலர் நலத்துறையை மறுகட்டமைப்பு செய்து சலுகைகள் அறிவிக்கப்படும்” என்றார்.