மம்தா பானர்ஜி தர்ணா: பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா கண்டனம்

டில்லி:

சிபிஐ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தி வரும் தர்ணா போராட்டத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர்  நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

சிபிஐ நடவடிக்கை எடுத்தால் ,அரசியல் பழிவாங்கல் என்றும், நடவடிக்கை எடுக்காவிட்டால், சிபிஐ கூண்டுக்கிளி என்றும்  எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர் என்றும் விமர்சித்து உள்ளார்.

சாரதா நிதி மோசடி தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, வழக்கு தொடர்பாக  மேற்கு வங்க காவல்ஆணையருக்கு சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால், அவரின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்த முயன்றனர். ஆனால், அவர்களை தடுத்து நிறுத்திய மேற்கு வங்க காவல்துறையினர், சிபிஐ அதிகாரிகளை கைது செய்து காவல்துறை அலுவலகம் அழைத்து சென்று விடுவித்தனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாநில அரசை கலைக்க பாஜக அரசு முயற்சிப்பதாக கூறி நேற்று இரவு முதல் மேற்குவங்க முதல்வர்  மம்தா பானர்ஜி  தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.

இதற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும்  எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர்,  சிபிஐ தனது பணியை மேற்கொள்ள வேண்டுமா அல்லது வேண்டாமா என கேள்வி எழுப்பினார்.

சிபிஐ தனது பணியை செய்தால் அதை அரசியல் பழிவாங்கல் என்று எதிர் கட்சிகள் குற்றம் சாட்டுவதாகவும் பணியை செய்யவில்லை என்றால் கூண்டு கிளி என விமர்சிப்பதாகவும் குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், எதிர்க்கட்சிகள் சிந்திக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி யுள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், இந்த விவகாரம் இரு தரப்பினரையும் குற்றம் சாட்டி மார்க்சிய கம்யூனிஸ்டு தலைவர் சீத்தாராம் யெச்சூரி டிவிட் போட்டுள்ளார். அதில்,  பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் நாடகம் நடத்துவதாக விமர்சித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி