கொல்கத்தா:பிரதமர் மோடி தலைமையில் நிதிஆயோக் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணிப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்திய அரசின் மிக உயர்ந்த குழுவாக நிதி ஆயோக் இருந்து வருகிறது. நிதிஆயோக் குழுவின் உறுப்பினர்களாக அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன்பிரதேச துணை நிலை ஆளுநர்கள்,  மத்தியஅமைச்சர்கள மூத்த அதிகாரிகள் ஆகியோர்  இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழுவின் கூட்டம் 6வது  பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு லடாக் யூனியன் பிரதேசமாக உருவானபின் முதல்முறையாக நிதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறது.  இந்த முறை யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகளும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் வேளாண் பிரச்சினைகள், உள்கட்டமைப்பு, உற்பத்தித்துறை, மனிதவள மேம்பாட்டு ஆகியவற்றில் உள்ள பிரச்சினைகள், வளர்ச்சிக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

மேற்குவங்க மாநில சட்டமன்றதேர்தல் மற்றும் பல்வேறு பிரச்சினைகளில் மோடி அரசுக்கும் மம்தாபானர்ஜி அரசுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருவதால், இன்றைய கூட்டத்தை மம்தா புறக்கணிக்க இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிதிஆயோக் கூட்டம் உதவாத முயற்சி, இந்த அமைப்புக்கு நிதி அதிகாரம் ஏதுமில்லை, மாநிலங்களின் திட்டங்களுக்கு அங்கீகாரமும், ஆதரவும்அளிக்க முடியாது என சமீபத்தில் மம்தா விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.