கொல்கத்தா :

மே.வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதை யொட்டி, ஆளும் திரினாமூல் காங்கிரசும், பா.ஜ.க..வும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. அங்குள்ள பங்குரா மாவட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமீத்ஷா கடந்த 5 ஆம் தேதி பிரச்சாரத்தை தொடங்கினார்.

இந்த மாவட்டத்தை உள்ளடக்கிய சங்கல் மஹால் பகுதியில் 40 சதவீத பழங்குடியின மக்கள் உள்ளனர். இந்த பகுதியில் அதிக இடங்களை பெறும் கட்சியே மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் என்பதால் இரு கட்சிகளும் போட்டி போட்டு இங்கு பிரச்சாரம் செய்கின்றன.

இந்த பகுதியை சேர்ந்த பழங்குடியின தலைவரான பிர்சா முண்டா, சுதந்தர போராட்ட தியாகி ஆவார், அங்குள்ள மக்களால் தெய்வமாக வணங்கப்படுவர்.

தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த அமீத்ஷா, பிர்சா முண்டா சிலைக்கு பதிலாக வேறொரு சிலைக்கு தெரியாமல் மாலை அணிவித்து சென்று விட்டார். இது, அங்குள்ள பழங்குடியின மக்களிடையே கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

நேற்று முதல்- அமைச்சர் மம்தா பானர்ஜியும், பங்குரா மாவட்டத்தில் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

பிர்சா முண்டா சிலைக்கு பதிலாக வேறு சிலைக்கு அமீத்ஷா , மாலை அணிவித்து சென்றதை மம்தா நினைவு கூர்ந்தார். ஐந்தாம் தேதி பிரச்சாரத்துக்கு வந்த அமீத்ஷா, அந்த பகுதியில், பழங்குடியின பிரமுகர் வீட்டில் மதிய உணவு அருந்தினார்.

இது குறித்து பேசிய மம்தா “இங்கு வந்த அமீத்ஷா, பழங்குடியின வீட்டில் உணவு சாப்பிட்டதாக சொல்லி போட்டாவுக்கு போஸ் கொடுத்து சென்றுள்ளார். இது ஒரு நாடகம்.

ஐந்து நட்சத்திர ஓட்டலில் இருந்து கொண்டுவரப்பட்ட உணவைத்தான் அமீத்ஷா சாப்பிட்டுள்ளார். அமீத்ஷா வருவதற்கு முன்பாக அந்த வீடு சுத்தம் செய்யப்பட்டு, போட்டோ எடுக்க வசதியாக வண்ணம் பூசப்பட்டுள்ளது.

அமீத்ஷாவுடன் உணவு சாப்பிட்டவர்களும் வெளியே இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் தான்” என மம்தா பானர்ஜி அதிரடி தகவலை வெளியிட்டார்.

“அந்த வீட்டில் உள்ளவர்கள் முட்டைகோஸ் நறுக்குவது போன்ற வீடியோ காட்சிகள், அமீத்ஷா உணவு அருந்தும் முன்பாக டி.வி.யில். காட்டப்பட்டன. ஆனால் அமீத்ஷா சாப்பிட்ட தட்டில், அந்த பதார்த்தம் இல்லை” என அவர் கூறினார்.

– பா. பாரதி