பாஜகவின் வெறியாட்டத்தில் உடைக்கப்பட்ட வித்யாசாகரின் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தின் ‘டிபி’யாக மாற்றிய மம்தா பானர்ஜி…

கொல்கத்தா:

மேற்கு வங்கத்தில் நேற்று நடத்திய பாஜக வன்முறையின்போது உடைக்கப்பட்ட வித்யாசகர் சிலையின் புகைப்படத்தை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட திரிணாமுல் காங்கிரஸ்கட்சி தலைவர்கள் தங்களது பேஸ்புக், டிவிட்டர் சமூக வலைதள பக்கங்களின் டிபியாக மாற்றி உள்ளனர்.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் பிரசார பேரணி நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. அப்போது அவருக்கு எதிராக கொல்கத்தா பல்கலைக்கழகம் முன்பு அங்குள்ள திரிணாமுல் ஆதரவு மாணவர்கள், கோபேக் அமித்ஷா’ என கறுப்புக்கொடி எந்தி போராட்டம் நடத்தினர். இதனால் பாஜக மாணவர்கள் அமைப்புக்கும், அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில், அநத பகுதியில் உள்ள  ஈஸ்வரசந்திர வித்யாசாகர் கல்லூரியிலும் பாஜகவினர் நுழைந்து சூறையாடினர்.

இந்த வன்முறையில், கல்லூரி வளாகத்தில் இருந்த  ஈஸ்வர் சந்திரா வித்யாசாகரின் மார்பளவு சிலை உடைக்கப் பட்டது. கல்லூரி வளாகத்திற்குள் இருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதைத்தொடர்ந்து, தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி இருதரப்பினரையும் கலைத்துள்ளனர்.

இதை பார்வையிட்ட  மம்தா பானர்ஜி அமித்ஷாவை கடுமையாக சாடினார். இந்த நிலையில்,  உடைந்த வித்யாசகர் சிலையை தனது பேஸ்புக், டிவிட்டர் பக்கத்தில் டிபி எனப்படும் முகப்பு படமாக மாற்றி உள்ளார். அவரைத் தொடர்ந்து அவரது கட்சியினரும் வித்யாசாகர் உடைந்த சிலையின் புகைப்படத்தை தங்களது சமூக வலைதள டிபியாக மாற்றி உள்ளனர்.