“பத்மாவதி” ரிலீசுக்கு உதவுவோம்!: மம்தா பானர்ஜி

--

கொல்கத்தா:

மேற்கு வங்கத்தில் ‘பத்மாவதி’ திரைப்படம் வெளியாக தேவையான உதவிகள் செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்தியா டுடே கான்கிளேவ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் மேலும் பேசுகையில், ‘‘இதர மாநிலங்களில் பத்மாவதி திரைப்படம் வெளியிட முடியவில்லை என்றால், நாங்கள் இங்கு சிறப்பான ஏற்பாடு செய்து தருகிறோம். இதை செய்து தருவதன் மூலம் மேற்கு வங்கம் பெருமை அடையும், மகிழ்ச்சி அடையும்’’ என்றார்.

மத்திய பிரதேசத்தில் பத்மாவதி திரைப்படத்தை வெளியிட அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தடை விதித்துள்ளார். சென்சார் போர்டு இந்த திரைப்படத்துக்கு அனுமதி வழங்கிய போதும், உச்சநீதிமன்றம் வெளியீட்டிற்கு தடை விதிக்க மறுத்துவிட்டபோதும் அம்மாநில அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் வரலாற்றை சிதைக்கும் செயலை ஏற்கமாட்டோம் என்று பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

ஒரு புறம் பத்மாவதி திரைப்படத்துக்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் சமயத்தில் மம்தா பானர்ஜி மட்டும் இப்படத்துக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்து தெரிவித்தார். திரைத்துறையினர் அனைவரும் ஒன்றிணைந்து இதற்கு குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.