’’நிறம் மாறிய பூக்கள்’’.. மம்தாவின் அதிரடி..

மே.வங்க மாநில போராளி மம்தா பானர்ஜி- தனது கட்சியை உருமாற்றம் செய்துள்ளார்.

கம்யூனிஸ்ட்களுடன் மென்மை போக்கை காங்கிரஸ் கடைபிடித்ததால்- அதில் இருந்து வெளியேறி திரிணாமூல் காங்கிரஸ் என்ற கட்சியை 1998 ஆம் ஆண்டு தொடங்கினார் மம்தா.

2006 ஆம் ஆண்டு சிங்கூரில் கார் தொழிற்சாலைக்காக விவசாய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதற்கு எதிராக மம்தா நடத்திய போராட்டம்- 2011 ல் அவரை முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்தது.

இன்று அவரும் ஒரு பிரதமர் வேட்பாளராக சித்தரிக்கப்படுகிறார்.

ஒரு அதிரடி முடிவாக தனது கட்சியின் பெயரை மாற்றி இருப்பதோடு- சின்னம் மற்றும் கொடியின் நிறத்தையும் மாற்றி விட்டார்-மம்தா.

அவரது தேர்தல் சின்னம் வண்ணப்பூக்களாக இதுவரை இருந்தது.இனிமேல் கருப்பு-வெள்ளையில் –அந்த சின்னம் இருக்கும்.

கட்சி பெயரில் இருந்து காங்கிரசை நீக்கி விட்டார்.

இனி அவரது கட்சி- திரிணாமூல் என்றே அழைக்கப்படும்.

எனினும் தேர்தல் ஆணையத்தில் அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ் என்ற பெயரில் தான் –கட்சி பெயர் இருக்கும். அந்த கட்சியை அகில இந்திய கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதால்- திரிணாமூலுடன் காங்கிரஸ் பெயரும் ஒட்டிக்கொண்டிருக்கும்.

கட்சி மேலிடத்துடன் சண்டை போட்டு பிரிந்த பல காங்கிரஸ் தலைவர்கள் –தங்கள் கட்சி பெயரில் காங்கிரசையும் சேர்த்து வைத்திருப்பது நினைவு கூறத்தக்கது.

தமிழ்நாட்டில் தமிழ் மாநில காங்கிரசில் ஆரம்பித்தால்-

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ்,தேசிய வாத காங்கிரஸ் என இந்த பட்டியல் அனுமார் வால் போல் நீளும்.

—-பாப்பாங்குளம் பாரதி

You may have missed