கொல்கத்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மம்தா  சம்ஸ்கிருத சுலோகம் சொல்லும் போட்டிக்கு மோடியையும் அமித்ஷாவையும் அழைத்துள்ளார்.

இன்று நாடெங்கும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதை ஒட்டி நேற்று இரவு கொல்கத்தாவில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவை சர்வதேச மார்வாடி கூட்டமைப்பு நடத்தியது. இதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

இந்த விழாவில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “நாட்டில் உள்ள அனைத்து மக்களும் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவை கண்டு பயம் கொள்கின்றனர். நான் யாரிடம் பேசினாலும் அவர்கள் சிபிஐயால் கைது செய்யப்படுவோம் என பயப்படுகின்றனர். நான் உங்கள் வீடுகளுக்கு காரணமின்றி அவர்கள் நுழையக் கூடாது என அஞ்சுகிறேன்.

மக்கள் தலைவர்களைக் கண்டு அஞ்சும் நிலை மாற வேண்டும். இந்த நிலை மாறினால் தான் தொழிலதிபர்களுக்கு தொல்லை இருக்காது. எனது ஒரே குற்றம் மற்றவர்களைப் போல் வாக்குறுதி அளித்து ஏமாற்றாமல்  நான் எனது வாக்குறுதியை காப்பாற்றுவது மட்டுமே ஆகும்.

பாஜகவினர் நான் துர்கா பூஜை நடத்த அனுமதிக்க மாட்டேன் என என்னை குற்றம் சொல்கின்றனர். நான் பூஜை செய்பவள் தான். வெறுமனே நெற்றியில் திலகமிட்டு நிற்பது மட்டும் பூஜை இல்லை. நான் அமித்ஷாவையும் மோடியையும் என்னைப் போல் சமஸ்கிருத சுலோகங்கள் சொல்ல போட்டிக்கு அழைக்கிறேன்.

அப்போது யார் சம்ஸ்கிருத மந்திரங்கள் குறித்து அதிகம் அறிந்துள்ளனர் என்பது தெரிய வரும். நாட்டில் உள்ள லட்சக்கணக்கான கோவில்களில் இதுவரை பாஜகவினர் எத்தனை கோவில்கள் கட்டி உள்ளனர்? அவர்களால் ஒரே ஒரு ராமர் கோவில் கூட கட்ட முடியவில்லை” எனக் கூறி உள்ளார்.