கொல்கத்தா

மேற்கு வங்க மாநிலத்தில் ராமநவமி ஊர்வலத்தின் போது வெடித்த வன்முறைக்கு முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு இந்து அமைப்பினர் பேரணிகளையும் ஊர்வலங்களையும் நிகழ்த்தினர்.    கடந்த ஞாயிறு இதை ஒட்டி மேற்குவங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் உள்ள பெல்தி கிராமத்தில் நடந்த ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டுள்ளது.    இந்த ஊர்வலத்தில் பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த தொண்டர்கள் பட்டாக்கத்தி போன்ற ஆயுதங்களுடன் ஊர்வலத்தில் கலந்துக் கொண்டனர்.

ஆயுதங்களுடன் ஊர்வலம் நடத்தியதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் ஊர்வலத்தில் மோதல் உண்டாகியது.  அது வன்முறையாக வெடித்து ஷேக் ஷாஜகான் என்னும் 50 வயதான நபர் கொல்லபட்டுள்ளார்   அத்துடன் ஐந்து காவல்துறையினர் காயம் அடைந்துள்ளனர்.    இந்த வன்முறையை ஒட்டி பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   ஊரெங்கும் காவல்துறையினரின் காவல் பலப்படுத்தப் பட்டுள்ளது.

இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “ஸ்ரீராம நவமி ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது கண்டிக்கத் தக்கது.   பகவான் ராமர் ஆயுதங்களுடனும், பட்டாக் கத்தி ஏந்தியும் ஊர்வலமோ பேரணியோ நடத்தச் சொன்னாரா? ராமர் பெயரைச் சொல்லி வன்முறை செய்பவர்களிடம் நாட்டின் சட்டம் ஒழுங்கை கொடுத்துவிடலாமா?   இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நான் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.    தவறு செய்தவர்களுக்கு கடும் தண்டனை காத்திருக்கிறது.

ஒரு சில போக்கிரிகள் தலையில் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு கையில் பட்டாக்கத்திகளுடன் தெருவில் கலவரம் உண்டாக்குகிறார்கள்.   அதை வங்க மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம்.   வங்காளத்துக்கு ஒரு தனி கலாச்சாரம் உண்டு.  இங்கு துர்கா பூஜை,  ரம்ஜான், மர்றும் கிறிஸ்துமஸ் ஆகிய அனைத்து விழாக்களும் கொண்டாடப்படும்.  ஆனால் எந்த ஒரு அமைதியின்மையையும்,  வன்முறையையும் மாநிலம் விரும்பாது”  என தெரிவித்துள்ளார்.

பாஜகவை போலவே மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸும் ராமநவமி பேரணிகளை நிகழ்த்தியது.   இந்த பேரணிகளில் இரு இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஆயுதங்களுடன் கலந்துக் கொண்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.