கொல்கத்தா

மோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவில் கலந்துக் கொள்ள போவதில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் பாஜகவினருக்கும் இடையே கடும் சர்ச்சைகள் உண்டாகின. பலவிதமான கருத்து மோதல்கள் தலைவர்களுக்கிடையில் நடந்தன. அமித்ஷா நடத்திய சாலைப்பேரணியில் கடும் வன்முறை வெடித்தது. வன்முறைக்கு பாஜக மற்றும் திருணாமுல் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினர்.

பாஜக மக்களவை தேர்தலில் அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. நளை மோடி பிரதமர் பதவி ஏற்க உள்ளார். இந்த விழாவுக்கு அனைத்து கட்சி தலைவர்களும் மாநில முதல்வர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். அவ்வகையில் மேற்கு வங்க முதல்வர் மற்றும் திருணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் என்னும் முறையில் மம்தா பானர்ஜிக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து மம்தா பானர்ஜி,

புதிய பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துக்கள். எனக்கு உங்கள் பதவி ஏற்பு விழா அழைப்பு வந்தது. நானு அதில் கலந்துக்கொள்ள திட்டமிட்டிருந்தேன். ஆனால் அப்போது மீடியாக்களில் வந்த சில செய்திகளை நான் காண நேர்ந்தது. அந்த செய்திகளில் வங்காள மாநிலத்தில் 54 பேர் அரசியல் வன்முறையில் கொல்லப்பட்டதாக பாஜகவினரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது உண்மை அல்ல. இந்த மரணங்கள் அனைத்தும் குடும்ப சண்டை, முன் விரோதம் போன்ற காரணங்களால் நிகழ்ந்துள்ளன.   இதற்கும் அரசியலுக்கும் தொடர்பு உள்ளதாக எங்களிடம் உள்ள எந்த விவரமும் தெரிவிக்கவில்லை. என்னை மன்னியுங்கள், மோடி அவர்களே, இந்த செய்திகளால் எனக்கு உங்கள் பதவி ஏற்பு விழாவில் கலந்துக்கொள்ள மனம் ஒப்பவில்லை.

இது சுதந்திர இந்தியாவின் முக்கிய விழா என்பதை நான் அறிவேன். இதை எந்த ஒரு அரசியல் கட்சியும் குறைவாக மதிப்பிடக் கூடாது என்பதையும் இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவதும் தவறு என்பதும் எனக்கு தெரியும். என்னை மன்னித்து விடுங்கள்

என டிவிட்டர் மூலம் மோடிக்கு தெரிவித்துள்ளார்.