மாநிலங்களுக்கு செல்லும் அனைத்து விமான சேவைகளையும் நிறுத்துங்கள்! மம்தா

கொல்கத்தா:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மாநிலங்களுக்கு இடையே  செல்லும் அனைத்து விமான சேவைகளையும் நிறுத்துங்கள் என்று பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக  உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 400-ஐ நெருங்குகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இதற்கிடையில், பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த 38 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்தார். இவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்கெனவே இருந்த நிலையில், வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர் என கூறப்படுகிறது.

இதேபோல், மும்பையில், 63 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரும், குஜராத் மாநிலம் சூரத்தில் சிகிச்சை பெற்று வந்த 67 வயது முதியவரும் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.  நேற்று மட்டும் 3 உயிரிழந்துள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றால் 396 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.  அதன்படி, மகாராஷ்டிராவில் 74 பேரும், கேரளாவில் 64 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 29 பேரும், ராஜஸ்தானில் 28 பேரும், கர்நாடகாவில் 26 பேரும், டெல்லியில் 21 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 6 மணி வரையில், 17 ஆயிரத்து 237 பேர்களின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மாநிலத்திற்குள் செல்லும் அனைத்து விமானங்களையும் நிறுத்துமாறு பிரதமர் மோடியை மம்தா கேட்டுக்கொள்கிறார்

இதுதொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதி உள்ளார்.