எரிவாயு விலையேற்றத்தைக் கண்டித்து பெண்கள் பேரணி : மம்தா அழைப்பு

கொல்கத்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சமையல் எரிவாயு விலை ஏற்றத்தைக் கண்டித்து  பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டில் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக கொரோனா தொற்று காரணமாக அனைத்து தொழில்களும் முடங்கி பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.  இதனால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.  இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து புதுப்புது உச்சத்தைத் தொடவே மக்கள் பெரிதும் துயருற்று வருகின்றனர்.

அவர்கள் துயரை அதிகமாக்கும் வகையில் சென்ற மாதம் மட்டும் மூன்று முறை சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது.  அதாவது முதலில் ரூ.25, அடுத்தது ரூ.50, மாத இறுதியில் ரூ.100 என மும்முறை விலை ஏற்றப்பட்டுள்ளது.   இது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை உண்டாக்கி இருக்கிறது.  இந்த விலையேற்றத்தைக் கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து மேற்கு வங்க மாநில அமைகர் சந்திரிமா பட்டாச்சாரியா, “சமையல் எரிவாயு விலை ஏற்றத்தைக் கண்டித்து பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ள பேரணிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.   இந்த விலை ஏற்றத்தால் நாட்டில் ஒவ்வொரு பெண்ணும் சிரமப்பட்டு வருகின்றனர்.” எனத் தெரிவித்துள்ளார்..