வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த புல்புல் புயல், மேற்கு வங்கம் – வங்கதேசம் இடையே நேற்று முன்தினம் இரவு கரையை கடந்த நிலையில், சேதம் குறித்து மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா உடன் பிரதமர் மோடி ஆலோசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதி தீவிர புயலாக வலுப்பெற்றது. புல்புல் எனப் பெயரிடப்பட்ட அந்தப் புயல், ஒடிசாவை தாக்கும் என முதலில் கணிக்கப்பட்டது. ஆனால், மேற்கு வங்கத்தை நோக்கி அது நகரத் தொடங்கியது. இது தொடர்பான வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையால், மேற்கு வங்கத்தில் முன்னெச்சரிக்கை பணிகள் முடுக்கிவிடப்பட்டன. நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு தொடங்கி, நள்ளிரவு 12.30 மணி வரை புயல் கரையை கடந்தது. புயல் கரையை கடக்க, 4 மணி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. புயல் கரையை கடந்தபோது சுமார் 134 கி.மீட்டர் வீகத்தில் காற்று வீசியதோடு, மேற்குவங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தா, பர்கானாஸ் பகுதிகளில் நேற்று அதிகாலை 5 மணி வரை மிக பலத்த மழை பெய்தது.

கனமழை காரணமாக கொல்கத்தா மற்றும் வடக்கு பர்கானாஸ் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சூறைக்காற்று காரணமாக நூற்றுக்கணக்கில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஆயிரத்திற்கும் அதிகமான மின் கம்பங்கள் சரிந்தன. இதனால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. மரங்கள் சாலைகளில் விழுந்துள்ளதால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

சாலைகளில் விழுந்துள்ள மரங்களை முதலில் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் மாநகராட்சி அதிகாரிகளுடன், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபட்டு வருகின்றனர். மின்கம்பங்களை சரி செய்ய இன்று பிற்பகல் முதல் மின்வாரிய ஊழியர்களும் பணி செய்ய உள்ளதாக மேற்குவங்க அரசு தெரிவித்துள்ளது. புயல் காரணமாக பர்கானாஸ் மாவட்டத்தில் 5 பேரும், கொல்கத்தாவில் 2 பேரும் பலியாகியுள்ளதாக மாநில அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், வங்கதேசத்தில் 8 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புயல் பாதித்த பகுதிகளை அம்மாநில முதல்வர் மம்தா பார்வையிட உள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக உயிரிழப்புகள் தவிற்கப்பட்டதாகவும், புயல் சேதங்கள் குறித்து அதிகாரிகள் உடன் ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, இன்று அல்லது நாளை பார்வையிடுவார் என்று தெரிவித்துள்ளார்.

அதேநேரம், புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து மேற்குவங்க முதல்வருடன் பிரதமர் மோடி நேற்று தொலைப்பேசியில் பேசிய நிலையில், மீண்டும் ஒருமுறை நிவாரண பணிகள் குறித்து தொலைப்பேசி மூலமாகவே ஆலோசித்துள்ளார். அத்துடன், மேற்குவங்கத்திற்கு தேவையான அத்தனை உதவிகளையும் தாம் செய்வதாகவும் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார் என்று பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.