கொல்கத்தா: நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக கொல்கத்தா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

மேற்குவங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கும், மத்திய பாரதீய ஜனதா அரசுக்கு பல விஷயங்களிலும் கடும் மோதல் நிலவிவரும் சூழலில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விவேகானந்தர் ஜெயந்தி விழா மற்றும் கொல்கத்தா துறைமுகத்தின் 150வது ஆண்டு விழா ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக கொல்கத்தா சென்றார் நரேந்திர மோடி. அப்போது, அவரை ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசினார் மம்தா பானர்ஜி. டெல்லியில் பிரதமர் மோடியை, மேற்குவங்க முதல்வர் மம்தா சந்தித்தப் பின்னர், கொல்கத்தாவில் நடக்கும் இரண்டாவது சந்திப்பாகும் இது.

சந்திப்பிற்கு பின்னர், “குடியுரிமைச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்துப் பிரதமரிடம் கேள்வி எழுப்பி, அவற்றை ஏற்க மாட்டேன் என்று தெரிவித்தேன்” என்றார் மம்தா.

மேலும், இந்த சந்திப்பிற்கு பின்னர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணியினர் ஏற்பாடு செய்திருந்த குடியுரிமை சட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்றார் மம்தா என்பது குறிப்பிடத்தக்கது.