கொல்கத்தா: ஃபனி புயலால், வங்க மாநிலத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து மதிப்பிட, மத்திய அரசு கூட்டுவதாய் இருந்த கூட்டு மதிப்பாய்வு கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டார் வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி.

தற்போது ஒடிசா மாநிலத்தில் இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஃபனி புயல் ஒடிசாவைத் தாக்கிவிட்டு, வங்கம் நோக்கித்தான் சென்றது. எனவே, அதுதொடர்பான ஒரு மதிப்பாய்வு கூட்டத்தை, வங்க அரசுடன் மேற்கொள்ள வேண்டுமென மத்திய அரசின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஆனால், மாநில அரசின் அதிகாரிகள் பலரும் மக்களவைத் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதால், இந்த நேரத்தில், மதிப்பாய்வு கூட்டத்திற்கு வாய்ப்பில்லை எனவும் மாநில அரசின் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் தொலைபேசியில் அழைப்பு விடுத்தால், வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மதித்துப் பேசுவதுகூட கிடையாது என்று சமீபத்தில் பிரதமர் மோடி புலம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.