மோடிக்கு கடிதம் எழுதிய மம்தா பானர்ஜி – எதற்கு தெரியுமா?

கொல்கத்தா: தேர்தல்களை அரசு நிதியளிப்பு முறையில் நடத்துவது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டுமென பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது; இந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மிக அதிகளவு நிதி செலவு செய்யப்பட்டுள்ளது. எனவே, நமது ஜனநாயக அமைப்பில் ஊழலையும், மோசடியையும் ஒழிக்கும் வகையிலும், தேர்தலை வெளிப்படையான மற்றும் நியாயமான தன்மையில் நடத்தும் வகையிலும், அரசு நிதியளிப்பு குறித்து விவாதிக்கும் நேரம் வந்துள்ளது.

எங்கள் கட்சியின் 2014 மற்றும் 2019 தேர்தல் அறிக்கைகளிலேயே இதை நாங்கள் குறிப்பிட்டுள்ளோம். தேர்தல்களில் அரசு நிதியளிப்பு நடைமுறை தற்போது 65 நாடுகளில் புழக்கத்தில் உள்ளது.

எனவே, ஊழலை ஒழிக்கும் வகையில், அரசு நிதியளிப்பு குறித்த ஒற்றை செயல்திட்டத்தை உருவாக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும். நம் நாட்டில் உடனடியாக தேர்தல் சீர்திருத்தம் தேவைப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார் மம்தா பானர்ஜி.