சென்னையில் பிரபல ஜவுளிக்கடை உரிமையாளரின் மகனிடம் வெங்காயம் இறக்குமதி செய்து மோசடியில் ஈடுபட்டதாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னையில் பிரபல ஜவளிக்கடையான ஜயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளரின் மகன் சுந்தரலிங்கம், சமீபத்தில் பிரகாஷ் என்பவரிடம் வெங்காயம் இறக்குமதி செய்து தரும்படி கோரிக்கை வைத்துள்ளார். அதன் படி கடந்த அக்டோபர் மாதம் ரூ. 8 லட்சத்திற்கு வெங்காயம் இறக்குமதி செய்ததாக கூறி, பிரகாஷ் பணம் கேட்டிருக்கிறார். அப்போது வெங்காயம் அனுப்பியவரின் வங்கி கணக்கு எண்ணை தர சுந்தரலிங்கம் கோர, தனது வங்கிக் கணக்கு எண்ணை பிரகாஷ் அளித்திருக்கிறார். அதை நம்பி சுந்தரலிங்கமும் அந்த வங்கி கணக்கில் பணம் செலுத்தியிருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு தனது வங்கி கணக்கில் இருந்து பணம் அனுப்பப்பட்ட வங்கி கணக்குகள் குறித்து ஆராய்ந்தபோது, பிரகாஷ் தனது வங்கிக் கணக்கை கொடுத்து பணத்தை வாங்கி மோசடி செய்தது அவருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினரிடம் புகார் அளித்த சுந்தரலிங்கம், பிரகாஷை கைது செய்யும் படி கோரிக்கை வைத்ததோடு, தனது பணத்தையும் மீட்டுத் தரும்படி கேட்டிருந்தார். இப்புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர், நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிரகாஷ் என்பவரை இன்று காலை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பிரகாஷிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், நாசிக்கில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்து தருவதாக கூறி தான் ஏமாற்றியதாக அவரே ஒப்புக்கொண்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.