பிரியங்கா குறித்து ஆபாசமான டிவிட்: பீகார் மாநில இந்துத்துவா இளைஞர் கைது

பாட்னா:

காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள பிரியங்கா காந்தி குறித்து, டிவிட்டர் வலைதளத்தில் தகாத வார்த்தைகளால் பதிவிட்ட பீகார் மாநிலத்தை சேர்ந்த யோகி சஞ்சய்நாத் என்பவரை பீகார் மாநில சைபர் கிரைம் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

சமீபத்தில்,  பிரியங்கா காந்தி  உத்தரபிரதேச மாநில கிழக்கு பகுதி பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டடார். இதற்கு காங்கிரசார் உள்பட எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், பாஜக மற்றும் இந்துத்வா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

பிரியங்கா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அநாகரிகமா பீகார் மாநிலத்தை சேர்ந்த  யோகி சஞ்சய் நாத் என்பவர் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இது  காங்கிரசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இதுகுறித்து, பீகாரை சேர்ந்த சமூக ஆர்வலர் சாஹின் சையத் காவல்துறையில் புகார் கொடுத்தார்.

அதையடுத்து, பீகார் மாநில சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, பீகார் மாநிலத்தின் வினோத்புர் நகரை சேர்ந்த யோகி சஞ்சய் நாத் என்பவரை கைது செய்தனர்.

இதுகுறித்து கூறிய பீகார் மாநில கதிகார் டவுன் காவல்நிலைய அதிகாரி ரஞ்சன் குமார், பிரியங்கா குறித்து மோசமான வார்த்தைகளால் டிவிட் போட்டிருந்த யோகி சஞ்சய் நாத் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.