சென்னை : பிரம்ம குமாரிகள் சங்க பெண் பொறுப்பாளருக்கு கத்திக் குத்து

சென்னை

சென்னையின் ராயப்பேட்டையில் உள்ள பிரம்மகுமாரிகள் சங்க பெண் பொறுப்பாளரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் பிரம்ம குமாரிகள் சங்க கிளை உள்ளது.  இங்கு தியாயனம், யோகா உள்ளிட்ட பயிற்சிகள் நடைபெறுகிறது.   நூற்றுக்கணக்கானோர் பயிற்சி பெறும் இந்த சந்தத்தில் சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு மணிவண்ணன் என்பவர் தியான பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.

இவரது செயல்பாடுகள் சரியில்லை எனக் கூறி சங்க நிர்வாகிகள் அவரை வெளியே அனுப்பினார்கள்.   அவர் தனது சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு சென்று விட்டார்.  சுமார் ஏழு ஆண்டுகள் கழிந்து மீண்டும் இந்த சங்கத்துக்கு வந்த மணிவண்ணன் தன்னை தியான வகுப்பில் சேர்க்க வேண்டும் என கூறி உள்ளார்.

சங்க நிர்வாகியான ரஞ்சனி தேவி அதை மறுத்துள்ளார்.    ஆத்திரம் அடைந்த மணிவண்ணன் அருகில் வைக்கப்பட்டிருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து  ரஞ்சனி தேவியை சரமாரியாக தலை மற்றும் முதுகில் குத்தி உள்ளார்.   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.  அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காயம் அடைந்த ரஞ்சனி தேவியை ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.   அங்கிருந்து அவர் தற்போது காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.