போபால்: ஏழை விவசாயி ஒருவர் 134 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து இருப்பதாக கூறி வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் பின்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவி குப்தா.  29 வயது. அவர் ஒரு ஏழை விவசாயி. அவருக்கு வருமானவரித்துறை ஒரு கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறது.

அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது: ரவிகுப்தா குஜராத்தில் வைர வியாபார நிறுவனம் நடத்தி வருகிறார். 2011ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2012ம் ஆண்டு பிப்ரவரி வரை பலகோடி ரூபாய் நிதி பரிமாற்றம் செய்திருக்கிறார்.

அதில் ரூ.134 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதார் என்று தெரிவித்துள்ளது. 2019 மார்ச் மாதத்தில் ஒருமுறையும், 2019ம் ஆண்டு ஜூலையில் ஒரு முறையும் நோட்டீஸ் வந்தது. அப்போது அதை தெரியாமல் அனுப்பியிருக்கிறார்கள் என்று ரவி குப்தா நினைத்து சாதாரணமாக இருந்திருக்கிறார்.

ஆனால் இந்த முறை அனுப்பப்பட்ட நோட்டீசில் வரி கட்டவில்லை என்றால் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. அதை கண்டு அதிர்ந்த அவர், வருமானவரித்துறையினருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

இது குறித்து ரவி குப்தா கூறி இருப்பதாவது: இந்த பரிவர்த்தனைகள் நடைபெற்ற போது எனக்கு வயது 21. 2011, 2012ம் ஆண்டுகளில் நான் மும்பை, குஜராதில் இல்லவே இல்லை.

அதன்பிறகு இந்தூரில் நான் ஒரு நிறுவனத்தில் பணியாற்றினேன். அப்போது எனது மாதச்சம்பளம் 7 ஆயிரம் ரூபாய். இது தொடர்பாக மத்திய பிரதேச சைபர் போலீஸ், மகாராஷ்டிரா போலீஸ், பிரதமர் அலுவலகம் ஆகியவற்றுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார்.