மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக சிறுத்தை ஒன்று மனிதர்களை வேட்டையாடி, நர மாமிசம் சாப்பிட்டு வந்துள்ளது.

அவரங்கபாத், சோலாப்பூர், அகமதுநகர், பீட் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள வனப்பகுதியிலும், வயல்வெளியிலும் உலவி வந்த இந்த சிறுத்தை இதுவரை 8 பேரை கொன்றுள்ளது.

கடந்த மாதம் 9 வயது சிறுமியை, சிறுத்தை கொன்று தின்ற நிலையில், இதனை சுட்டுக்கொல்ல வன அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக சிறுத்தைகளை சுடுவதில் பயிற்சி பெற்ற ஒருவர் நியமிக்கப்பட்டார்.

சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வாழைத் தோட்டத்தில் இந்த நர மாமிச சிறுத்தை நடமாடுவதாக வன அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அதனை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் முடியவில்லை.

இதனால் வன அலுவலர்களால் நியமிக்கப்பட்ட ‘ஷுட்டர்’ (துப்பாக்கி வீரர்) அந்த சிறுத்தையை நேற்று மாலை சுட்டுக்கொன்றார். இந்த தகவலை மண்டல வன பாதுகாப்பாளர் பட்டீல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

– பா. பாரதி