பனாஜி: கோவாவின் முன்னாள் முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினருமான சர்ச்சில் அலெமியோ எழுப்பிய கேள்வியில் அவையே சிரிப்பால் அதிர்ந்தது. அவர் எழுப்பிய கேள்வி இதுதான்; “மாட்டை சாப்பிட்டதற்காக ஒரு மனிதன் தண்டைனையை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்போது, அதே செயலுக்காக ஒரு புலி ஏன் தண்டனை பெறக்கூடாது? “

அண்மையில் மதேய் வனவிலங்கு சரணாலயத்தில் நான்கு புலிகள் கொல்லப்பட்டது தொடர்பாக நடந்த விவாதத்தின் போது மேற்கண்டவாறு கேள்வியெழுப்பிய அலெமியோ, மனித உயிரை விட வனவிலங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகக் கூறினார்.  உள்ளூர் கிராமவாசி ஒருவரின் கால்நடைகளை இந்த புலிகள் கொன்றதால் அவரால் விஷம் வைக்கப்பட்டன.

“இந்தப் பிரச்சினையை இரு தரப்பிலிருந்தும் பார்க்க வேண்டும்“, என்று கூறிய அலெமியோ, “வனச்சட்டத்தின் படி புலிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆனால், மனித கண்ணோட்டத்தில், மாடுகளுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஒரு மனிதன் மாட்டிறைச்சியை உண்டால் அவன் தண்டிக்கப்படுகிறான், ஆனால் ஒரு புலி கால்நடைகளைக் கொன்று தின்றதற்கு அது எந்த தண்டனையையும் எதிர்கொள்ளவில்லை என்று பேசியபோது, சட்டமன்றத்தில் உரத்த சிரிப்பொலி எழுந்தது.

“இது சிரிப்பதற்குரிய விஷயம் அல்ல, மிகவும் கவலைக்குரியது“, என்று கூறித் தனது பேச்சைத் தொடர்ந்தார் அலெமியோ. “மிகவும் ஏழையான அந்த மனிதன் தனது பசுக்களை நம்பித்தான் வாழ்ந்து வந்தார். அவர் அதையே இழந்துவிட்டால் என்ன செய்வார்? அதனால் தான் பசுக்களைக் காப்பாற்ற அவர் ஏதாவது செய்ய வேண்டியிருந்தது. அதில், அந்த புலி இறந்து விட்டால், அந்த மனிதன் தண்டிக்கப்பட வேண்டுமா?“, என்று கேள்வியெழுப்பினார் அலெமியோ.

“அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மேல் சிறிது கவனம் செலுத்தி, அவர்களை முதலில் மனிதர்களாக நடத்த வேண்டும். அநேக மக்கள் தெருக்களில் உறங்குகிறார்கள் ஆனால் யாரும் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. மேனகா காந்தி தெருநாய்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என விரும்பினார், ஆனால் மனிதர்கள் மேல் அக்கறை செலுத்த யாரும் விரும்புவதில்லை. மனித உயிரை நாம் மதிக்க வேண்டும்“ என்று அவர் வாதிட்டார்.