ரூ.9 கோடி மதிப்புடைய அரிய பாம்பை வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற நபர் கைது

அரிய வகை பாம்புகளை வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற நபரை மேற்கு வங்க போலீசார் கைது செய்தனர். கடத்த முயன்ற பாம்பின் மதிப்பு சந்தையில் ரூ.9 கோடி என கூறப்பட்டுள்ளது.

snake

இந்தியாவில் மேற்கு வங்கம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தக்சக் என்று அழைக்கப்படும் அரிய வகை பாம்புகள் வாழ்ந்து வருகின்றன. இத்தகைய பாம்புகள் மத்திய அரசின் அழிந்து வரும் வன ஊர்வன இனங்களில் முக்கிய இடங்களை பிடித்து வருகின்றன.

அப்படி இருந்தும் இந்த அரிய வகை பாம்புகளுக்கு ஜப்பானில் மிகப்பெரிய வியாபார சந்தை உள்ளது. மருத்துவம், உணவு, மற்றும் தோலுக்காக இந்த பாம்புகளுக்கு சந்தையில் வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்தில் போக்குவரத்து காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமான நபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அந்த நபர் வைத்திருந்த கோணிப்பையை போலீசார் சோதனையிட்டபோது, அதில் அரியவகை தக்சக் பாம்புகள் இருப்பதை பார்த்தனர்.

இதையடுத்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், ” அவர் பெயர் இஷா சேக் என்றும், மால்டா மாவட்டத்தில் பிடித்த பாம்பை ஜார்கண்ட் மாநிலத்தில் விற்கப்பதற்காக எடுத்து சென்றதும் “ தெரிய வந்தது.

அதன்பின்னர் கைது செய்யப்பட்ட இஷா சேக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பாம்பு உள்ளூர் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பாம்பின் மதிப்பு சந்தையில் ரூ.9 கோடி என கூறப்பட்டுள்ளது.