பாட்னா:

பீகார் மாநிலத்தில் ஒரே நபர் 3 வகையான அரசு பணிகளில் வேலை செய்து கடந்த 30 ஆண்டு களாக சம்பளம்  பெற்று வந்தது தற்போது தெரிய வந்துள்ளது. மாநில அரசின் நிர்வாகத் திறமை யின்மையை இது காட்டுவதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பொறியாளர் சுரேஷ் ராம் என்பவர், பீகார் மாநிலத்தின் 3 துறைகளில் அரசு பணியாற்றி சம்பளம் பெற்று வந்துள்ளது தெரிய வந்ததுள்ளது. இதையடுத்து, அந்த கில்லாடி பொறியாளர் தலைமறைவாகி விட்டார்.

அவர் பணியாற்றியது, ஓரிரு நாட்கள் அல்ல…. 30 ஆண்டுகளாக 3 அரசு பணிகளில் அமர்ந்து லம்பாக சம்பளம் பெற்று ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

1988ம் ஆண்டு கிஷான்கன்ஞ் பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியில் ஜூனியர் என்ஜினீயராக அரசு பணியில் சேர்ந்த சுரேஷ் ராம், அடுத்ததாக மாநிர அரசின்  நகர நீர் வளத் துறையிடம் இருந்து அவரை பணியில் சேருமாறு 2 கடிதம் வந்துள்ளது, ஆனால் இரண்டும் வெவ்வேறு பகுதிகளில் பணி என தெரிவிக்கப்பட்டிருந்தது.

நிர்வாக குளறுபடியால் இந்த பணி ஆணை வெளியான நிலையில்,  அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சுரேஷ் ராமன், அந்த 2 பணியிலும் சேர்ந்தார். அதன்படி, பீகார் மாநிலத்தின்  பாங்கா மாவட்டத்தின் பெல்ஹார் தொகுதியில் ஒரு பணியிலும், மற்றொரு பணி  சுபாலின் பீம்நகா கிழக்கு கடற்கரையில் உள்ள பணிகளிலும் சேர்ந்தார்.

3 அரசுப் பணிகளிலும் திறமையாகவும், மற்றவர்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையிலும் சுமார் 30 ஆண்டுகாலமாக பணியாற்றிய கில்லாடியான சுரேஷ் ராம்  3 இடங்களிலும் சம்பளம் பெற்று வந்துள்ளார்.

தற்போது நடைபெற்ற ஆடிட்டிங் ஒன்றில், அரசின் வருவாய், செலவு மற்றும் சொத்துக்களை முறைப்படுத்த பயன்படுத்தும் நிதி நிர்வாகத்துறை இதை கண்டுபிடித்ததால்,   இந்த விவகாரம் தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் சுரேஷ் ராம் குறித்த விவரங்களை ஆய்வு செய்துள்ளனர். மேலும, அவரிடம் சர்டிபிகேட் உள்பட ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளனர்.

இதையடுத்து சுரேஷ்ராம் தலைமறைவாகி விட்டார்.

இதுகுறித்து கூறிய கிஷான்கன்ஞ் பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் துறையின் செயல் பொறியாளர் மதுசுதன் குமார் கர்னா, கடந்த ஜூலை 22ம் தேதி துணை செயலர் தனது ஆவணங்களை பாசனத்துறைக்கு கொண்டு வரும்படி ராமிடம் கூறினார். ஆனால் அவர் அதனை காட்டவில்லை. இதனையடுத்து ராமுக்கு எதிராக கிஷான்கன்ஞ் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

அரசுத் துறையில் ஒரே நபர் 3 அரசு பணிகளில் பணியாற்றி 30 ஆண்டுகளாக சம்பளம் பெற்று வந்தது பீகார் மாநில அரசின் நிர்வாகத்தின் மீது கடும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது. இது மாநில அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.