ஜெய்ஸ்ரீராம் கோஷம் போடுமாறு வற்புறுத்தி கொல்லப்பட்ட நபர்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் செரய்கேலா கர்ஸ்வான் மாவட்டத்தில், மோட்டார் சைக்கிளை திருடியதாக ஊர் மக்களால் பிடிக்கப்பட்ட நபர், கட்டிவைக்கப்பட்டு ஜெய்ஸ்ரீராம் கோஷம் போடுமாறு வற்புறுத்தப்பட்டு தாக்கப்பட்டதால், மருத்துவமனையில் மரணமடைந்தார் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

மேலும், இதுதொடர்பான வீடியோவும், ஜார்க்கண்ட் ஜனாதிகர் மகாசபா மற்றும் சிபிஐ (எம்எல்) அமைப்பினரால் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.

தப்ரீஸ் அன்சாரி என்ற நபர், மோட்டார் சைக்கிளை திருடினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கிராமத்தவரால் பிடிக்கப்பட்டார். பின்னர், ஒரு மின் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டதோடு, ஜெய்ஸ்ரீராம் என்று கோஷம் போடுமாறும் வற்புறுத்தப்பட்டார் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

அவரிடமிருந்து மோட்டார் சைக்கிள் மட்டுமின்றி, வேறுசில திருடுபோன பொருட்களும் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் நிலைமை மோசமாகவே, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மரணமடைந்ததாகவும் கூறப்படுகிறது. சிலர், அவர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டபோதே இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

அதேசமயம், தப்ரீஸ் அன்சாரியை தாங்கள் கைது செய்யும்போது அவர் நல்ல நிலையில் இருந்ததாகவே காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தப்ரீஸ் அன்சாரியின் குடும்பத்தினர் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.