எட்டு பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய தொழிலதிபர் தலை மறைவு

கோயம்புத்தூர்

ரு தொழிலதிபர் எட்டு பெண்களை திருமணம் செய்து கோடிக்கணக்கில் பண மோசடி செய்துவிட்டு  தலைமறைவாகி உள்ளார்.

கோயம்புத்தூர் வெள்ளலூரை சேர்ந்த கனகலட்சுமி நகரில் வசிப்பவர் புருஷோத்தமன்.   ஐம்பத்து ஏழு வயதான இவர் லாரி போக்குவரத்து நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.   தனது இரண்டாவது திருமணத்துக்காக அங்கிருந்த திருமணத் தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார்.   அதே மையத்தில் பதிவு செய்திருந்த குமுதவல்லி என்பவருக்கும் புருஷோத்தமனுக்கும் மையத்தை நடத்தி வந்த மோகன் மற்றும் வனஜா மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது.

புருஷோத்தமன தனது தொழில் விரிவாக்கத்துக்கு தேவை எனக் கூறி மாமனார் வீட்டில் இருந்து சுமார் ரூ. 3 கோடி பணம் வாங்கி உள்ளார்.   அத்துடன் அவர்களுடைய மற்ற சொத்துக்களையும் விற்று பணம் தருமாறு வற்புறுத்தி உள்ளார்.   குமுதவல்லியின் பிறந்த வீட்டாருக்கு இவர் மேல் சந்தேகம் வந்துள்ளது.   அவர்கள் விசாரித்த போது புருஷோத்தமனுக்கு ஏற்கனவே பல பெண்களுடன் திருமணம் ஆகி உள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

குமுதவல்லியின் பெற்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் மீது இடப்பட்ட உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.   முதலில்  கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த இந்த வழக்கு பிறகு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப் பட்டுள்ளது.   இந்த வழக்கு  குறித்து செய்தியாளர்களிடம் மகளிர் காவல் நிலைய அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

அவர்,  “வழக்கு தொடர்ந்த உடன் புருஷோத்தமன் தலைமறைவாகி விட்டார்.  அவரை தனிப் படை அமைத்து தேடி வருகிறோம்.   பல்வேறு ஊர்களில் 8 பெண்களை அவர் திருமணம் செய்துக் கொண்டு அவர்களிடம் ரூ. 5 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளார்.  அதில் சென்னையை சேர்ந்த பேராசிரியை ஒருவரிடம் ரூ. 1.5 கோடி மோசடி செய்ததும் அடங்கும்.   தற்போது திருமண தகவல் மையம் நடத்தி வந்த வனஜா மற்றும் மோகன் என்பவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்”  என தெரிவித்தார்.

You may have missed